

யோகேஸ்வரன் - நந்தினி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.
தமிழ் சீரியல்களில் மிகவும் பிரபலம் நந்தினி. 'சரவணன் மீனாட்சி' சீரியலில் மைனா என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதால் 'மைனா' நந்தினி என்று அழைக்கப்படுகிறார். அதற்குப் பிறகு 'சின்ன தம்பி', 'அரண்மனைக் கிளி' உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்தார்.
சீரியல்களில் கிடைத்த பிரபலத்தை வைத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்தன. 'வம்சம்', 'ரோமியோ ஜூலியட்', 'காஞ்சனா 3' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது உள்ள காமெடிக் காட்சி மிகவும் பிரபலம்.
இவருக்கும் யோகேஸ்வரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. நடிகர் மற்றும் நடன இயக்குநராக யோகேஸ்வரன் வலம் வருகிறார். யோகேஸ்வரன் - நந்தினி தம்பதியினர் டிக் டாக் வீடியோக்களில் மிகவும் பிரபலம். சில மாதங்களுக்கு முன்பு நந்தினி கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகேஸ்வரன் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பு நந்தினிக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், போட்டோ ஷூட் படங்கள் என மிகவும் வைரலாயின. நேற்று (செப்டம்பர் 5) யோகேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
யோகேஸ்வரன் - நந்தினி தம்பதியினருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.