

ஜெயம் ரவி நடித்து வரும் 'மிருதன்' படத்தில் மது குடிக்கும், புகை பிடிக்கும் காட்சிகளே இல்லை என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தனி ஒருவன்' விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பெரிய அளவில் வசூலும் செய்துவருகிறது.
'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் நடித்து வந்தார் ஜெயம் ரவி. இப்படத்துக்கு 'மிருதன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. லட்சுமி மேனன், பேபி அனிகா, ஸ்ரீமன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.
'மிருதன்' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் 30 நாட்கள் நடைபெற்று முடிந்துவிட்டது. அடுத்தகட்டப் படப்பிடிப்பை சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற எந்த ஒரு காட்சிகளே கிடையாது என்கிறது படக்குழு.