

'ரஜினி முருகன்' வெளியீட்டு தேதி அறிவிப்புக்காக பல்வேறு படங்கள் தங்களது வெளியீட்டு அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.
பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது.
'ரஜினி முருகன்' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து படத்தை செப்டம்பர் 17ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், திருப்பதி பிரதர்ஸ் கடன் பிரச்சினைகள் காரணமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பிரச்சினை முடிவுற்று வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என பலரும் காத்திருக்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' மற்றும் 'மாப்ள சிங்கம்' ஆகிய படங்கள் அனைத்து பணிகளையும் முடித்து காத்திருக்கிறார்கள். 'ரஜினி முருகன்' செப்டம்பர் 17ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கும் பட்சத்தில் இவ்விரண்டு படங்களையும் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
'ரஜினி முருகன்' பேச்சுவார்த்தையின் முடிவு இன்று (செப்டம்பர் 12) இரவு தெரியும் என்கிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள்.