

அக்டோபர் 1ம் தேதி 'புலி' வெளியாக இருப்பதால், 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கி இருக்கிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'புலி'. நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால், செப்டம்பர் 17ம் தேதி வெளியீட்டில் இருந்து அக்டோபர் 1ம் தேதிக்கு தங்களது வெளியீட்டை மாற்றி அமைத்திருக்கிறது படக்குழு.
பிரகாஷ் கோவேலமுடி இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் படம் 'இஞ்சி இடுப்பழகி'. மரகதமணி இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.வி.பி சினிமாஸ் தயாரித்திருக்கிறது. செப்டம்பரில் இசை வெளியீடு, அக்டோபர் 2ம் தேதி பட வெளியீடு என்று படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது அக்டோபர் 1ம் தேதி 'புலி' வெளியாகும் காரணத்தால் தங்களது வெளியீட்டை அக்டோபர் 2ம் தேதியில் இருந்து அக்டோபர் மாத இறுதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இன்னும் தேதி இறுதி செய்யப்படவில்லை.
'இஞ்சி இடுப்பழகி' படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.