

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார் விஜய் வசந்த்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். அவருடைய சொந்த ஊரில் ஆகஸ்ட் 30-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. வசந்தகுமார் மறைவைத் தொடர்ந்து கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது.
தற்போது கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட வேண்டும் என்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக விஜய் வசந்த் எந்தவொரு பதிலுமே தெரிவிக்காமல் இருந்தார்.
இதனிடையே, மறைந்த வசந்தகுமாரின் 7-ம் நாளை அனுசரிக்கும் வகையில் கன்னியாகுமரியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் விஜய் வசந்த் கலந்து கொண்டார். மவுன ஊர்வலத்தின் இறுதியில் தேர்தலில் போட்டி குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:
"என்னுடைய தரப்பிலிருந்து எந்தவொரு முடிவுமே எடுக்கவில்லை. கட்சியிலிருந்து அப்பாவுக்குக் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாகச் செய்தார். கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதன்படிதான் செயல்படுவோம். தேர்தலில் நிற்பது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. குடும்பத்துடன் ஆலோசித்துவிட்டுச் சொல்கிறேன்".
இவ்வாறு விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நடிகராக உள்ளா விஜய் வசந்த், 'சென்னை 28', 'நாடோடிகள்', 'என்னமோ நடக்குது', 'சென்னை 28 பார்ட் 2', 'அச்சமின்றி', 'வேலைக்காரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 'மை டியர் லிசா' என்னும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.