Published : 03 Sep 2020 17:40 pm

Updated : 03 Sep 2020 17:41 pm

 

Published : 03 Sep 2020 05:40 PM
Last Updated : 03 Sep 2020 05:41 PM

’எம்.ஜி.ஆரின் டைரக்டர்’  ப.நீலகண்டன்; எளிய படங்கள்; தெளிவான திரைக்கதைகள்! 

pa-neelakandan

எம்.ஜி.ஆர். நடிகர் மட்டுமல்ல. தயாரிப்பாளரும் கூட. தயாரிப்பாளர் மட்டுமா? இயக்குநரும் கூட. ஒரு படத்தின் வெற்றிக்கு என்னென்ன தேவை என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுபவர். அப்படி அவர், கதைக்கு எவையெல்லாம் தேவை என்று சேர்த்தாரோ... வெகுஜன மக்களை எந்தந்த விஷயங்கள் ஈர்க்கும் என்று கணக்கிட்டுக் கணித்தாரோ... அந்த விஷயங்கள்தான் ஒரு சினிமாவுக்கான வெற்றி ஃபார்முலா என்று உருவானது. அவைதான்... ‘எம்ஜிஆர் ஃபார்முலா’ என்று கொண்டாடப்பட்டது. எம்ஜிஆரையும் எம்ஜிஆர் ஃபார்முலாவையும் கனகச்சிதமாக உள்வாங்கிக் கொண்டு, பல வெற்றிப் படங்களைக் குவித்தவர்... எம்.ஜி.ஆருக்குக் கொடுத்தவர். ப.நீலகண்டன்.

சிவாஜிக்கு பீம்சிங் என்றால் எம்ஜிஆருக்கு நீலகண்டன். தமிழ்த் திரையுலகில், எம்ஜிஆரை வைத்து அதிகப் படங்களைக் கொடுத்தவர் இவரே. கிட்டத்தட்ட எம்ஜிஆரை வைத்து 18 படங்களை இயக்கியிருக்கிறார் ப.நீலகண்டன்.

1916ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜயந்தி நாளில் விழுப்புரத்தில் பிறந்தார் ப.நீலகண்டன். காந்தி பிறந்த நாளில் பிறந்த நீலகண்டன், வளர வளர, காங்கிரஸ்காரராகவும் காந்தியவாதியாகவும் திகழ்ந்தார். சிறுவயதில் இருந்தே எழுதுவதிலும் படிப்பதிலும் ஈடுபாடுடன் வளர்ந்தார். நாடகங்கள் மீது காதல் வந்தது.
பிறகு, இவர் எழுதிய நாடகங்களில் அந்த நாடகம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த நாடகத்தை மிகப்பெரிய அந்தத் தயாரிப்பாளர் பார்த்தார். நாடகம் ரொம்பவே பிடித்துப் போனது. ப.நீலகண்டனை அழைத்தார். ‘இதை படமாக எடுக்க விரும்புகிறேன். உங்களுக்கு சம்மதமெனில், நாடகத்தை சினிமாவுக்காக மாற்றி எழுதிக் கொடுங்கள்’ என்று சொன்னார். நீலகண்டனும் எழுதிக்கொடுத்தார். அந்தப் படம் 47ம் ஆண்டு, திரைப்படமாக வந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. திரையுலகில் நுழையும்போதே, அப்படியொரு சிகப்புக்கம்பள வரவேற்பு கிடைத்தது. அந்தத் திரைப்படம்... ‘நாம் இருவர்’. தயாரிப்பாளர்... ஏவி.மெய்யப்பச் செட்டியார்.
இதைத் தொடர்ந்து ஏவி.எம் நிறுவனத்தில் கதை உள்ளிட்ட விஷயங்களில் முக்கியப் பங்கு வகித்தார் நீலகண்டன். 51ம் ஆண்டு, அண்ணாவின் ‘ஓர் இரவு’ திரைப்படத்துக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றினார். சினிமாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப்படித்தார்.

ஏ.எல்.எஸ். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, சிவாஜி நடித்த ‘அம்பிகாபதி’, எம்ஜிஆர் நடித்த ‘திருடாதே’ முதலான படங்களைத் தயாரித்தார். சிவாஜியை வைத்து ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தை இயக்கினார். ’முதல் தேதி’ படத்தை சிவாஜியை வைத்து இயக்கினார்.

65ம் ஆண்டு ஏ.எல்.எஸ். தயாரிப்பில் ‘ஆனந்தி’ படத்தை இயக்கினார். அற்புதமான படம். மிகச்சிறந்த கதையும் திரைக்கதையுமாக வந்திருந்தது. ஆனால் படம் சரியாகப் போகவில்லை என்பதை பல வருடங்கள் கழித்தும் கூட சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார்.

எம்ஜிஆரை வைத்து ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தை இயக்கினார். பின்னர், ’நல்லவன் வாழ்வான்’ படத்தை இயக்கும் போது, எம்ஜிஆருக்கும் நீலகண்டனுக்கும் நட்பு பலமானது. பரஸ்பரம் இருவரும் புரிந்துகொண்டார்கள். நீலகண்டனின் திறமையை எம்ஜிஆர் உணர்ந்தார். எம்ஜிஆரின் தேவையை நன்றாகவே உணர்ந்துகொண்டார் நீலகண்டன்.

சிவாஜியை வைத்தும் எஸ்.எஸ்.ஆரை வைத்தும் இயக்கியவர்தான் நீலகண்டன். கலைஞரின் ‘பூம்புகார்’ படத்தை இயக்கியதும் இவரே. ஆனால் ‘கொடுத்து வைத்தவள்’, ’காவல்காரன்’, ’கண்ணன் என் காதலன்’, ’கணவன்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘என் அண்ணன்’, ’குமரிக்கோட்டம்’, ’ஒரு தாய்மக்கள்’, ’நீரும் நெருப்பும்’ என்று வருடத்துக்கொரு படம் வீதம் எம்ஜிஆரை வைத்து இயக்கினார். எல்லாமே எம்ஜிஆருக்கும் மக்களுக்கும் இன்னும் இன்னுமாக நெருக்கத்தை ஏற்படுத்திய படங்களாக, ஒரு மாஸ் ஹீரோ அந்தஸ்தை உயர்த்துகிற படங்களாக அமைந்தன.

ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை மக்களுக்குப் புரியும் வகையில் படமாக்குகிற வித்தையில் நீலகண்டன் கில்லாடி என்று எம்ஜிஆரால் புகழப்பட்டார். அந்தக் கதைக்குள் எம்ஜிஆருக்குத் தேவையான விஷயங்களை, பார்க்கிறவர்களுக்கு உறுத்தாமலும் அதேசமயம் பிரச்சார பில்டப்புகள் என்று தெரியாத வகையிலும் மிக நேர்த்தியாக திரைக்கதையில் தூவிக்கொண்டே வருவார் நீலகண்டன்.

’உலகம் சுற்றும் வாலிபன்’ எம்ஜிஆர் இயக்கினார் என்றாலும் நீலகண்டனின் பங்களிப்பும் உண்டு.படத்தின் டைட்டிலிலும் அவர் பெயர் இடம்பெறும். கிட்டத்தட்ட அறுபதுகளில் இருந்து தொடங்கிய எம்ஜிஆர் - ப.நீலகண்டன் கூட்டணி, ’ராமன் தேடிய சீதை’, ‘நேற்று இன்று நாளை’ என்றெல்லாம் வளர்ந்து, 75ம் ஆண்டு ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘76ம் ஆண்டு ‘நீதிக்கு தலைவணங்கு’ என்பது வரை தொடர்ந்தது.

திரை அனுபவங்களையும் திரைப்படத்துக்கான இலக்கணங்களையும் ஆங்கிலப் படங்களின் கதை கட்டமைப்புகளையும் ஆராய்ந்து பல நூல்களும் எழுதியிருக்கிற ப.நீலகண்டனுக்கு எழுத்தும் சினிமாவும் மட்டுமே சுவாசம்; வாழ்க்கை எல்லாமே!

இயக்குநர் ப.நீலகண்டன் 92ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 3ம் தேதி காலமானார். அவர் மறையும் போது, 76 வயது. இன்று ப.நீலகண்டன் நினைவு தினம். 28வது நினைவுதினம்.

எம்ஜிஆர் மனதில் மட்டுமல்ல... தன் திறமையாலும் இயக்கிய படங்களாலும் ரசிக மனங்களிலும் இடம்பிடித்த இயக்குநர் ப.நீலகண்டனை நினைவுகூர்வோம்.
****************

தவறவிடாதீர்!

’எம்.ஜி.ஆரின் டைரக்டர்’  ப.நீலகண்டன்; எளிய படங்கள்; தெளிவான திரைக்கதைகள்!எம்ஜிஆர் டைரக்டர் ப.நீலகண்டன்இயக்குநர் ப.நீலகண்டன்சக்கரவர்த்தி திருமகள்நேற்று இன்று நாளைநல்லவன் வாழ்வான்பூம்புகார்கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிஏ.எல்.எஸ். புரொடக்‌ஷன்ஸ்நீரும் நெருப்பும்கலைஞர் கருணாநிதிஅறிஞர் அண்ணாஓர் இரவுPa.neelakandanMGRSivajiDirector pa.neelakandan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author