காதலரைக் கரம் பிடிக்கும் வித்யூலேகா

காதலரைக் கரம் பிடிக்கும் வித்யூலேகா
Updated on
1 min read

வித்யூலேகாவிற்கும் அவருடைய காதலர் சஞ்சய்க்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. அதனைத் தொடர்ந்து 'ஜில்லா', 'வீரம்', 'மாஸ்', 'இனிமே இப்படித்தான்', 'புலி', 'வேதாளம்' உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும், நாயகிக்குத் தோழியாகவும் நடித்துள்ளார்.

பின்பு தெலுங்கிலும் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக உடல் எடையைக் குறைக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படங்களையும் ட்விட்டரில் வெளியிட்டார். உடல் இளைத்தவுடன் அதன் புகைப்படங்களுடன் பேட்டியும் அளித்திருந்தார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 26-ம் தேதி வித்யூலேகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக வித்யூலேகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:

"26.8.2020 அன்று நெருங்கிய சொந்தங்கள் சூழ எனது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்தது. இது எங்களுக்கான சிறிய வெளிச்சக் கீற்று. எங்களுக்குக் கிடைத்த அன்புக்கு நாங்கள் என்றும் நன்றியுடன் இருப்போம். நாங்கள் முகக் கவசங்கள் அணிந்தோம். புகைப்படங்கள் எடுக்கும்போது மட்டும் நீக்கினோம். (யாரும் கேட்பதற்கு முன் நானே சொல்லிவிட்டேன்). உங்கள் நல் வாழ்த்துகளுக்கு அனைவருக்கும் நன்றி. சிறப்பான நாட்கள் இன்னும் வரவுள்ளன".

இவ்வாறு வித்யூலேகா தெரிவித்துள்ளார்.

இவருக்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவர் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இருவருமே 2019-ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்துள்ளனர். சஞ்சய் - வித்யூலேகா இருவருடைய பெற்றோர் சம்மதத்துடனே இந்த திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in