Published : 31 Aug 2020 15:44 pm

Updated : 31 Aug 2020 15:44 pm

 

Published : 31 Aug 2020 03:44 PM
Last Updated : 31 Aug 2020 03:44 PM

’மெட்ராஸ் கேர்ள்’, ‘ஃபிப்டி பைஸே’, ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாட்டு; 41 ஆண்டுகளாகியும் மணம் வீசுது பாரதிராஜாவின் ‘நிறம் மாறாத பூக்கள்’

41-years-of-niram-maaradha-pookkal

காதல் என்பதே மெல்லிய உணர்வுகளின் மொத்த உருவம்தான். அப்படிப்பட்ட காதல் கதையை, இன்னும் மெல்லியதான திரைக்கதையுடன் சொன்னால் எப்படியிருக்கும்? எந்த திடுக்கிடல் சம்பவங்களுமில்லை. ஆனால் பதைபதைத்துப் போனோம். வில்லனோ கெட்டவனோ என்று யாருமில்லை. ஆனால், என்னவாக இருக்கும், எப்படியாக முடியும் என்று தவித்துப் போனோம். துள்ளத்துடிக்கிற காதல் கதையெல்லாம் இல்லை. ஆனால், நம்மை ஒருகணம் உறையவைத்துவிடுகிற கதை. படத்தின் பெயரைக் கேட்கும் போதெல்லாம், சட்டென்று மனசு கனமாகும். அந்த ஹம்மிங் செவியாடும். ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ என்று சொன்ன பாரதிராஜாவின் ‘நிறம் மாறாத பூக்கள்’... இன்னமும் வாசம் வீசிக்கொண்டிருக்கின்றன.

தமிழ் சினிமாவில், எத்தனையோ இயக்குநர்கள் உச்சம் தொட்டிருக்கிறார்கள். ரசிக மனங்களில் கோட்டை கட்டியிருக்கிறார்கள். பிரமாண்டமான வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறார்கள். 77ம் ஆண்டு, ‘16 வயதினிலே’ எனும் படத்தின் மூலமாக, ஒரு தென்றலைப் போல் முகம் காட்டி, புயலைப் போல் அசைத்தார், தமிழ் சினிமாவை!
77ம் ஆண்டு ‘16 வயதினிலே’, 78ம் ஆண்டு ‘கிழக்கே போகும் ரயில்’, அதே வருடத்தில் ‘சிகப்பு ரோஜாக்கள்’, 79ம் ஆண்டு ‘புதிய வார்ப்புகள்’, அதே வருடத்தில் ‘நிறம் மாறாத பூக்கள்’ என மூன்று வருடங்களில், ஐந்து தமிழ்ப் படங்களைக் கொடுத்தார் பாரதிராஜா. இந்த ஐந்துமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. இப்படியொரு தொடர் வெற்றியைத் தந்தவர் அநேகமாக பாரதிராஜாவாகத்தான் இருக்கும்.


‘நிறம் மாறாத பூக்கள்’. பொய் சொல்லிவிட்டு ஏமாற்றிவிட்டான் என்று சொன்னதை நம்பியதால் ஒரு காதல்... விளையாட்டுக்காகச் சொன்ன பொய், மிகப்பெரிய வினையாகிவிட்டதால் இன்னொரு காதல்... என்று நான்கு உள்ளங்களின் உன்னதக் காதலைச் சொல்லியிருப்பதுதான் ‘நிறம் மாறாத பூக்கள்’.

பட்டதாரி. வேலையில்லாமல் ஐம்பது பைசாவுக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை பணக்காரப் பெண் பார்க்கிறாள். தன் நிறுவனத்தில் மேனேஜர் வேலை தருகிறாள். பிறகு தன் மனதையும் சேர்த்துத் தருகிறாள். இருவரும் காதலிக்கிறார்கள். பெண்ணின் அப்பாவுக்கு விஷயம் தெரிகிறது. சம்மதிப்பது போல் நாடகமாடுகிறார். பிறகு, பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான் என்று மகளை நம்பவைக்கிறார்.

நாயகியின் அப்பாவுக்கு ஊட்டியில் நண்பர் உண்டு. மனசு லேசாகட்டும், காதல் வலியில் இருந்து குணமாகி மீண்டு வரட்டும் என்று நண்பரின் வீட்டுக்கு ஊட்டிக்கு அனுப்பிவைக்கிறார் அப்பா. அவர்கள் போடுகிற கணக்கு இவை மட்டுமா என்ன? ஊட்டி நண்பரின் மகனுக்கும் நாயகிக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பதுதான் முதல் திட்டம்.

ஏழை பட்டதாரியாக சுதாகர். கிழிந்த பனியனும் ஐம்பது காசுக்கு, ஹவுஸ் ஓனர் வீட்டில் கரண்ட் ஃபீஸாக்கி, அதில் காசு பார்ப்பதுமாக இருக்கிறார். பணக்காரப் பெண் ராதிகா. கிராமத்து பரஞ்சோதியையும் பாஞ்சாலியையும் அப்படியே சிட்டிக்குள் கூட்டி வந்து, நகர வாழ்க்கையை வாழச் செய்திருப்பார் பாரதிராஜா. துடுக்கும் மிடுக்குமாக ராதிகா, பிரமாதப் படுத்தியிருந்தார். சுதாகரும் அப்படித்தான்.

அந்த ஒண்டுக்குடித்தன வீட்டில், சுதாகரை விட அதிக வயதுகொண்ட திருமணமான பெண்மணி விடும் ஜொள்ளு, புதுசு. அவர் ஏக்கமும் தாபமுமாக... பார்ப்பதும் ஏற்ற இறக்கமாகப் பேசுவதும் ‘நா... னே... தான்’ என்பதும் காமெடியில் வேறொரு தினுசு. ராதிகாவின் காரைப் போலவே சுதாகர் - ராதிகா காதலும் ஸ்மூத்தாகப் போய்க்கொண்டிருக்க, ‘பணத்தைக் கையாடல் செய்துவிட்டு ஓடிவிட்டான்’ என்று ராதிகாவை நம்பவைப்பார் அப்பா. ராதிகாவும் நம்பிவிடுவார். சுதாகரை வெறுத்துவிடுவார். அதன் பிறகுதான் ஊட்டி.

அங்கே ஊட்டியில் விஜயன். எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கிறவர். கோட் பாக்கெட்டில் மதுவும் தோளில் டேப்ரிக்கார்டருமாக வலம் வருபவர். இவருக்கொரு பிளாஷ்பேக். ராதிகாவிடம் தன் கதையைச் சொல்கிறார். அதுவொரு காதல் கதை. அவர்களின் காதல். ஆமாம்... ரதியை காதலிக்கிறார். ஒருகட்டத்தில், விஜயனும் ரதியும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.

ஒருநாள்... ஹார்ஸ் ரைடிங் கற்றுக்கொடுக்கிறார். குதிரை வேகமெடுக்கிறது. பதைபதைக்கிறார் விஜயன். ‘எனக்கு ஹார்ஸ் ரைடிங்’ தெரியும் என்று சிரிக்கிறார். இன்னொரு முறை... காரோட்டக் கற்றுக் கொடுக்கிறார் விஜயன். காரில் தனியாக விர்ரெனப் பறக்கிறார் ரதி. தவித்துக் கலங்குகிறார் விஜயன். ‘எனக்கு காரோட்டத் தெரியும்’ என்கிறார். பிறகு ஏரியில் இறங்கச் சொல்கிறார் விஜயன். ‘எனக்கு ஸ்விம்மிங் தெரியாது’ என்கிறார். ஆனால் விஜயன் நம்பத் தயாராக இல்லை. இறங்கி, ஆழம் சென்றவர், கைதூக்கிக் கதறுகிறார். மரண பயத்தில் ஓலமிடுகிறார். இவை எல்லாமே நடிப்பு, ஏமாற்றுவதற்குத்தான் என்று விஜயன் இந்த முறை சிரித்துக் கொண்டே கரையில் நிற்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி இறந்து போகிறார் ரதி.

ரதியை இழந்து நிற்கும் விஜயனும் சுதாகரை வெறுத்து ஒதுக்கியிருக்கும் ராதிகாவும் லேசாக மனம் மாறுகிறார்கள். திருமணம் செய்துகொள்ளவும் சம்மதிக்கிறார்கள். அந்த சமயத்தில், ஊட்டியில், எஸ்டேட்டில் கூலி வேலை செய்யும் சுதாகரைப் பார்க்கிறார் ராதிகா. பிறகு விஷயம் தெரிகிறது. விஜயனுக்கும் தெரியவர, இறுதியில் சுதாகரையும் ராதிகாவையும் இணைத்து வைக்கிறார். ரதியை மூழ்கடித்த ஏரிக்குள் இறங்கி, தன் உயிரைப் போக்கிக் கொள்கிறார் விஜயன். ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ என்று மரக் கிளையில் தொங்கவிடப்பட்ட டேப் ரிக்கார்டரில் இருந்து பாடல் வருகிறது. படம் முடிகிறது. கனத்த இதயத்துடன் அரங்கை விட்டு வந்தார்கள் ரசிகர்கள். ஆனாலும் திரும்பத் திரும்ப வந்து பார்த்தார்கள். படத்தைக் கொண்டாடினார்கள். இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

படத்தில் சுதாகர், ராதிகா, விஜயன், ரதி இந்த நான்குபேர்தான் முக்கியக் கேரக்டர்கள். படத்தின் இன்னொரு ஸ்பெஷல்... சுதாகர் கேரக்டர் பெயர் சுதாகர். ராதிகா கேரக்டர் பெயர் ராதிகா. விஜயனுக்கும் ரதிக்கும் கூட இப்படித்தான். இதையும் புதுமையென ரசித்தது தமிழ் சினிமா.

பாக்யராஜின் கதை. பஞ்சு அருணாசலத்தின் வசனம். பாரதிராஜாவின் இயக்கம். எல்லாமே அமர்க்களம். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துக்குப் பிறகு இன்னொரு நகரத்து சப்ஜெக்ட். இரண்டு ஜோடிகளைக் கொண்ட கதை. இதன் வேறொரு வடிவமாகத்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

‘ஃபிப்டி பைஸே’ என்று சுதாகரை அழைப்பார் ராதிகா. ‘மெட்ராஸ் கேர்ள்’ என்று ராதிகாவை அழைப்பார் விஜயன். படத்தின் போஸ்டர், பேனர் விளம்பரங்களுக்கு சுதாகர் - ராதிகா ஜோடி பயன்படுத்தப்பட்டாலும், மனதை உறையவும் கரையவும் நெகிழவும் வைத்தவர்கள் விஜயனும் ரதியும்தான். இவர்களில் விஜயனின் நடிப்பு பிரமாதம். விஜயனுக்குக் கொடுக்கப்பட்ட அந்த கரகர குரலும் கூடுதல் ஸ்பெஷல். குரல் கொடுத்தவர்... பாரதிராஜா. படத்தில் ஒரு காட்சியில், எலெக்ட்ரீஷியனாக வருவார் சந்திரசேகர்.

இப்படித்தான் கதை பண்ணப்பட்டிருக்கும். திரைக்கதையாக்கப்பட்டிருக்கும். எந்த திடுக்கிடலோ, சஸ்பென்ஸோ இல்லாமல், நேர்க்கோட்டில் பயணிக்கும். நிவாஸின் ஒளிப்பதிவில் ஊட்டி, இன்னும் அழகாகியிருக்கும். ரதியும் அப்படித்தான்.

கவியரசர் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் பாடல்கள் எழுத, எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட். ‘முதன்முதலாக காதல் டூயட்’, ‘இரு பறவைகள் மலை முழுவதும்’, ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ என்று பாடல்கள், இன்றைக்கும் மலர்ந்த பூக்களாக மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

பாரதிராஜா, இளையராஜா முதலானோருக்கு திரைக்கு வருவதற்கு முன்பிருந்தே நண்பர்... எஸ்.பி.பாலசுப்ரமணியம். ‘16 வயதினிலே’ படத்தில் பாடுவதாக இருந்தது. தொண்டைப் பிரச்சினை. பாடவில்லை. ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, புதிய வார்ப்புகள்’ என வரிசையாக மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், கமலஹாசன் முதலானோர் பாடினார்கள். பாரதிராஜாவின் இயக்கத்தில், எஸ்.பி.பி. முதன் முதலாகப் பாடியது... ‘முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே...’ என்ற பாடல்தான். இளையராஜாவும் நான்குவரிப் பாடல் ஒன்று பாடியிருப்பார்.

’இரு பறவைகள் மலை முழுவதும்’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். நம்மையும் மலையில், பறவையோடு பறவையாக பறக்க வைத்திருப்பார் இளையராஜா. அதிராத கிடாரும் இழையோடுகிற வயலினுமாக ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாட்டு, தோற்றுப் போன காதலர்களின் தேசிய கீதம். மலேசியா வாசுதேவனும் ஜென்ஸியும் காதலின் உணர்வையும் வலியையும் நமக்குள் கடத்தி, இம்சை பண்ணிவிடுவார்கள். இளையராஜாவின் மேற்கத்திய இசையும் நம்மை என்னவோ செய்யும். படம் நெடுக, இளையராஜாவின் பிஜிஎம்... இந்த நான்குபேரைத் தாண்டி, ஒரு கேரக்டராகவே வந்து நமக்கு காட்சிகளுக்கு பொழிப்புரை சொல்லிக்கொண்டே இருக்கும்.

1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வெளியானது ‘நிறம் மாறாத பூக்கள்’. படம் வெளியாகி, 41 ஆண்டுகளாகின்றன.

‘சுதாகர் - ராதிகாவையும், விஜயன் - ரதியையும், அந்த ஏரியையும் டேப்ரிக்கார்டரையும் ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாடலையும் முக்கியமாக... பாரதிராஜாவையும் இளையராஜாவையும் மறக்கவே மாட்டார்கள் ரசிகர்கள்!

ரசிக மனங்களில் மாறவே மாறாத பூக்கள். எப்போதும் மணம் வீசிக்கொண்டிருக்கும் பூக்கள்... பாரதிராஜாவின் ‘நிறம் மாறாத பூக்கள்’.


தவறவிடாதீர்!

’மெட்ராஸ் கேர்ள்’‘ஃபிப்டி பைஸே’‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாட்டு; 41 ஆண்டுகளாகியும் மணம் வீசுது பாரதிராஜாவின் ‘நிறம் மாறாத பூக்கள்’நிறம் மாறாத பூக்கள்சுதாகர்ராதிகாவிஜயன்ரதிஒளிப்பதிவாளர் நிவாஸ்பாரதிராஜாபாக்யராஜ்இளையராஜாகங்கை அமரன்கண்ணதாசன்ஜென்ஸிஎஸ்.பி.பி.மலேசியா வாசுதேவன்பஞ்சு அருணாசலம்41 years of niram maaradha pookkalBjharathirajaaIlayaraajaGangaiameranBhagyarajRadhikaVijayanRathiSudhakar

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author