Published : 30 Aug 2020 19:00 pm

Updated : 30 Aug 2020 21:36 pm

 

Published : 30 Aug 2020 07:00 PM
Last Updated : 30 Aug 2020 09:36 PM

நடன நடிகர்... நாகேஷ் மைந்தன் ஆனந்த்பாபு - இன்று ஆனந்த்பாபு பிறந்தநாள்

anandbabu-birthday

தமிழ்த் திரையுலகில், நடனமாடத் தெரிந்த நடிகர்கள் என்று பட்டியலிட்டால், தடதடவெனச் சொல்லிவிடலாம். அந்தப் பட்டியலில், அந்த நடிகரின் பெயரை எழுதும் போதே, மனம் துள்ளும். சட்டென்று அவருடைய அப்பா முகமும் சேர்ந்து நினைவுக்கு வரும். ‘அப்பாவுக்கு தப்பாத பிள்ளை’யாய் நடனத்தில், கால்கள் பின்னிக் குழைவதும் வழுக்கி நகர்வதும் ஊர்ந்து பரபரப்பாவதும் மனத்திரையில் ஓடும். அந்த நடிகர்... ஆனந்த்பாபு.

ஒருபக்கம் நகைச்சுவை, இன்னொரு பக்கம் குணச்சித்திரம் என்று இரண்டு பக்கமும் இரண்டுகுதிரை பூட்டிக்கொண்டு, இணையற்ற நடிகர் என இலக்கணம் வகுத்தவர் நாகேஷ். அவரின் மகன் ஆனந்த்பாபுவுக்கு, நடிப்பதிலெல்லாம் நாட்டமில்லை. பள்ளிப் படிப்பு, கல்லூரி என்று படித்து வந்தார். அப்பாவுக்கும் மகனை சினிமாவுக்குள் கொண்டுவருகிற திட்டமெல்லாம் இல்லை.


நடிக்கிற ஆசைதான் இல்லை. ஆனால் அப்பாவின் நடனம் மீது மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. அவருக்கே தெரியாமல் இரண்டறக் கலந்திருந்தது. கல்லூரியில் ஒரு விழா. மிகப்பிரமாண்டமான விழா. அந்த விழாவுக்கு நாகேஷும் வந்திருந்தார். மேடையில், ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடந்தது. அடுத்து... நடன நிகழ்ச்சி. ஆனந்த்பாபு ஆடினார். மொத்தக் கூட்டமும் வாய் பிளந்தது. மறுநாள் பத்திரிகைகளில், ஆனந்த்பாபுவின் ஆட்டம் பற்றிய செய்தி வந்திருந்தது. மகனின் ஆட்டம் பார்த்து நாகேஷே மலைத்துத்தான் போனார்.

இப்படி மலைத்துவியந்தார்கள் திரையுலகத்தினர். நாகேஷ் வீட்டுக்கு அவரின் கால்ஷீட் கேட்டு வந்தவர்கள்தான் உண்டு. முதன்முதலாக, ஆனந்த்பாபுவை கால்ஷீட் கேட்டு வந்தது நடந்தது. ‘என் படத்துல உங்க பையனை அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன் சார். உங்க சம்மதம் வேணும்’ என்றார். பிறகு மகனைக் கேட்டார். சம்மதம் சொன்னார். நாகேஷும் ஒத்துக்கொண்டார். அந்த இயக்குநர் தன் படத்தில் அட்டகாசமான கேரக்டரைக் கொடுத்தார். ஆட்டம்பாட்டத்துடன் கதாபாத்திரம் அமைத்தார். மிகச்சிறந்த படத்தைப் பார்க்கவும் ஆனந்த்பாபுவின் நடனத்தைப் பார்த்து ரசிக்கவும் அலை அலையாய் வந்தது கூட்டம். அந்த இயக்குநர் ... டி.ராஜேந்தர். அந்தப் படம்... ‘தங்கைக்கோர் கீதம்’.

83ம் ஆண்டு வந்தது ‘தங்கைக்கோர் கீதம்’. ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகிலும் கவனம் ஈர்த்தார் ஆனந்த்பாபு. 84ம் ஆண்டு ராம.நாராயணன் இயக்கத்தில் ‘கடமை’, விசுவின் இயக்கத்தில் ‘புயல் கடந்த பூமி’, அதன் பின்னர் ‘நியாயம் கேட்கிறேன்’ என்று தொடர்ந்து படங்கள் வெளியாகின. 85ம் ஆண்டு, இந்திப் படத்தின் ரீமேக்காக ‘பாடும் வானம்பாடி’ வந்தது. மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. ஆனந்த்பாபுவின் நடனத்திறமையை முழுவதுமாகக் காட்டியது. பாடல்கள் ஹிட்டாகின.
இதன் பின்னர், ’உதயகீதம்’ படத்தில் நடித்தார். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ படத்தை இவர் நடிக்க நாகேஷே இயக்கினார். இதன் பிறகும் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன வாய்ப்புகள்.

அந்த சமயத்தில், இயக்குநர் விக்ரமனின் முதல் படமான ‘புதுவசந்தம்’, கே.எஸ்.ரவிகுமாரின் ‘புரியாத புதிர்’, ‘சேரன் பாண்டியன்’ என வரிசையாக பல படங்களில் நடித்தார். கே.பாலசந்தரின் ‘வானமே எல்லை’ படத்திலும் கவிதாலயாவின் தயாரிப்பில், அனந்துவின் இயக்கத்தில் ‘சிகரம்’ படத்திலும் நடித்தார். நடனத்தில் மிகப்பெரிய அளவில் பேரெடுத்தாலும் நடிப்பதிலும் நல்ல பேர் கிடைத்தாலும் மிகப்பெரிய அளவுக்கு ஏனோ வாய்ப்புகள் வராமலே போனது என்று சொல்லலாம். வந்த வாய்ப்புகளையும் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் சொல்கிறார்கள்.

ஆனாலும் ஆனந்த்பாபு எனும் நடன நடிகரை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ‘நாகேஷ் மகன்’ எனும் அடையாளத்துடன் சிறந்த நடன நடிகர் என்றும் பாராட்டப்பட்ட ஆனந்த்பாபுவுக்கு இன்று (30.8.2020) பிறந்தநாள்.

திறமைமிக்க கலைஞன் ஆனந்த்பாபுவை வாழ்த்துவோம்!


தவறவிடாதீர்!

நடன நடிகர்... நாகேஷ் மைந்தன் ஆனந்த்பாபு - இன்று ஆனந்த்பாபு பிறந்தநாள்ஆனந்த்பாபுநாகேஷ்நாகேஷ் மகன் ஆனந்த்பாபுநடிகர் ஆனந்த்பாபுபுது வசந்தம்தங்கைக்கோர் கீதம்புரியாத புதிர்சேரன் பாண்டியன்பாடும் வானம்பாடிவிக்ரமன்டி.ராஜேந்தர்கே.எஸ்.ரவிக்குமார்ராம.நாராயணன்ஆனந்த்பாபு பிறந்தநாள்நடன நடிகர்AnandbabuAnandbabu birthdayNagesh

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author