

கலைத்தாயின் தவப்புதல்வன் என்று சொன்னாலே நம் எல்லோருக்கும் சட்டென்று நினைவுக்கு வரும் அந்த கம்பீர முகத்துக்குச் சொந்தக்காரர்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பின் டிக்ஷனரி, பல்கலைக்கழகம் என்றெல்லாம் போற்றப்படுகிற சிவாஜியின் நடிப்பில் உருவான படங்கள் ஏராளம். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களும் தாராளம். அப்படியொரு புதுமையான, வினோதமான கேரக்டர்களை ஏற்று நடித்த படங்களில் ஒன்றுதான் ‘தவப்புதல்வன்’.
முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா சீனிவாசன் இயக்கத்தில், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவானது ‘தவப்புதல்வன்’. சிவாஜி, கே.ஆர்.விஜயா, பண்டரிபாய், சி.ஐ.டி.சகுந்தலா முதலானோர் நடித்திருந்தார்கள்.
இந்தப் படத்தில், சிவாஜி மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்திருந்தார். மாலை 6 மணிக்கு மேல், பார்வை தெரியாத கேரக்டர், தமிழ் சினிமாவுக்கு புதுசு.
இந்தப் படம் குறித்து, இயக்குநர் முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி தெரிவித்ததாவது:
‘’அப்பாவோட நண்பர் ஒருத்தர், அவர் பேரு கண்ணாடி சீத்தாராமன். அவருக்கு மாலைக்கண் நோய்ப் பிரச்சினை இருந்தது. பாண்டிபஜாரில், அப்போ சாந்தா பவன்னு ஒரு ஹோட்டல் இருந்துச்சு. இப்போ பாலாஜி பவன்னு ஆயிருச்சு. சாயந்திரம் நாலரை மணிக்கு இந்த ஹோட்டல்ல ஆறு இட்லி வாங்கிப்பார். கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பக்கம் வீடு. சிலசமயம் நானோ, அப்பாவோ கொண்டுபோய் விட்ருவோம். இல்லேன்னா, பஸ்ல போயிருவார். எப்படி இருந்தாலும் சாயந்திரம் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போயிருவார்.இருட்டறதுக்குள்ளே சாப்பிட்டுட்டு படுத்துருவாரு.
அப்பா (முக்தா சீனிவாசன்), இவரோட பிரச்சினையை ஒரு கேரக்டர் போலச் சொல்லி, தூயவன் சார்கிட்ட சொல்லி, கதை பண்ணச் சொன்னார். தூயவன் சார் அட்டகாசமா ஒரு கதை ரெடி பண்ணிக் கொண்டு வந்தார். சிவாஜி சார்கிட்ட கதை சொன்னப்போ, அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ‘பண்ணிடலாமே’ன்னு உடனே ஒத்துக்கிட்டார். அப்படித்தான் உருவாச்சு ‘தவப்புதல்வன்’ ‘’ என்று தெரிவித்தார்.
படத்தில், சோ, மனோரமா முதலானோர் நடித்திருந்தார்கள். கண்ணதாசன் பாட்டெழுத, எம்.எஸ்.வி. இசையமைத்தார். எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
மகனுக்கு மாலைக்கண் நோய் என்பது அம்மாவுக்குத் தெரியாது. ஆனால் இதை வைத்துக்கொண்டு சி.ஐ.டி.சகுந்தலா, சிவாஜியை ஆட்டிப் படைப்பார். கே.ஆர்.விஜயாவின் உணர்ச்சிகரமான நடிப்பு, மிகச்சிறந்த முறையில் இருந்தது. எல்லோரும் சிவாஜியின் நடிப்பையும் கே.ஆர்.விஜயாவின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டினார்கள்.
இரவானதும் சிவாஜி தவிப்பதையும் எவருக்கும் தெரியக்கூடாது என்று மருகுவதையும் அதற்கு உண்டான ஆபரேஷன் விஷயங்களையும் அழகுற இயக்கியிருப்பார் முக்தா சீனிவாசன்.
1972ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி வெளியானது ‘தவப்புதல்வன்’. மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ’’நூறு நாட்களைக் கடந்து ஓடிய இந்தப்படத்தில் பணிபுரிந்த முக்தா பிலிம்ஸ் ஊழியர்களுக்கும் டெக்னீஷியன்களுக்கும் நிறுவனத்தின் சார்பில், அரைப்பவுன் மோதிரம் வழங்கினார்கள். அப்போது ஒரு பவுன் மோதிரம் 250 ரூபாய்தான்’’ என்கிறார் முக்தா ரவி.
படம் வெளியாகி 48 ஆண்டுகளாகிவிட்டன. இன்றைக்கும் மனதில் கம்பீரமாக நிற்கிறான் ‘தவப்புதல்வன்’.