Last Updated : 26 Aug, 2020 01:51 PM

 

Published : 26 Aug 2020 01:51 PM
Last Updated : 26 Aug 2020 01:51 PM

ஒரே எம்ஜிஆர், ஒரே சிவாஜி, ஒரே ‘கூண்டுக்கிளி’; ’கூண்டுக்கிளி’ வெளியாகி 66 ஆண்டுகள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹீரோக்கள் ஜோடி போட்டு, வெற்றிக்கொடி நாட்டியது நடந்திருக்கிறது. சின்னப்பா, கிட்டப்பாக்கள் காலம் தொடங்கி. இன்றைக்கு அஜித் - விஜய் வரைக்கும் அப்படியொரு ஜோடி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இவர்களில் நீண்டகாலம் தமிழ் சினிமாவில் நீயா நானா என்று முன்னேறிய ஜோடி... எம்ஜிஆரும் சிவாஜியும்தான்!


எம்ஜிஆர் - சிவாஜி இரண்டுபேரும் எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இருவரும் மார்க்கெட் வேல்யூ கொண்ட உச்ச நட்சத்திரங்கள். இதையடுத்து எம்ஜிஆர் அரசியல் கட்சி தொடங்கினார். அரியணையில் அமர்ந்தார். சிவாஜி தொடர்ந்து நடித்தார். மரணிக்கும் வரை நடித்தார். மரணமில்லாப் பெருவாழ்வு எனும் புகழுடன் இருவருமே இன்று வரை போற்றப்படுகின்றனர்.

இவர்களுக்குப் பிறகு அடுத்த தலைமுறை நாயகர்களாக வந்தவர்கள் கமலும் ரஜினியும். ரஜினி கமலின் படத்தில்தான் அறிமுகமானார். தொடர்ந்து ஏகப்பட்ட படங்கள் இணைந்து நடித்தார்கள். ஒருகட்டத்தில் இருவருமே பேசிக்கொண்டார்கள்; பிரிந்து களமாடினார்கள். வெற்றி கிரீடம் சூடிக்கொண்டார்கள்.


ஆனால் எம்ஜிஆரும் சிவாஜியும் அப்படியில்லை. இருவரும் ஒருபடத்தில் இணைந்து நடித்தார்கள். ஒரே படத்தில், ஒரேயொரு படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அவ்வளவுதான். அதன் பிறகு, தனித்தனியே ராஜநடை போட்டார்கள். தனித்தனி கோட்டையில் அமர்ந்து, ராஜாங்கம் பண்ணினார்கள். அப்படி அவர்கள் சேர்ந்து நடித்த ஒரே படம்... ‘கூண்டுக்கிளி’.


ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரிப்பில், டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆரும் சிவாஜியும் சேர்ந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ உருவானது. ஜீவா, தங்கராஜ், மங்களா எனும் கதாபாத்திரங்களின் வழியே எம்ஜிஆர், சிவாஜியுடன் பி.எஸ்.சரோஜாவும் நடித்திருந்தார்.எழுத்தாளரும் பத்திரிகையாளருமான விந்தன், கதை, வசனம் எழுதியிருந்தார்.


சிவாஜிதான் ஜீவா. அவரிடம் இருந்துதான் கதையே தொடங்கும். தற்கொலைக்குக் கயிறு கிடைக்கும். இதைக் கொண்டு சாகலாம் என்று நினைப்பார். அப்போது ரயில் சத்தம் கேட்கும். ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுப்பார். அப்போது ரயில் நெருங்கும் வேளையில், எம்ஜிஆர் காப்பாற்றுவார். எம்ஜிஆரின் பெயர் தங்கராஜ். இருவரும் நண்பர்கள்.


‘மங்களா என்பவளைப் பெண் பார்க்கச் சென்றது, பிடித்துப் போனது, ஆரம்பத்தில் பெற்றோர் சம்மதித்தது, பிறகு கடன் உள்ளிட்ட பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் மங்களாவுக்கு திருமணம் செய்துவைக்க முடியாது என மறுத்துவிடுவது, அவளைத் தேடி சிவாஜி செல்வது, ஆனால் பலவருடங்களாகியும் அவளைக் கண்டறியாமல் அலைவது, ஒருகட்டத்தில் உயிரை விட முடிவு செய்வது என எம்ஜிஆரிடம், தன் நண்பரிடம் சொல்லுவார் சிவாஜி.


பிறகு சிவாஜியை தன் வீட்டுக்கு அழைத்து வருவார். வேலையும் வாங்கித் தருவார். மகனை அறிமுகப்படுத்தி வைப்பார். எம்ஜிஆரின் மனைவியைப் பார்த்ததும் அதிர்ந்து போவார் சிவாஜி. அவர்... சிவாஜி பெண் பார்த்த மங்களா. மயங்கிச் சரிவார்.


மங்களாவைப் பெண் பார்த்தது சிவாஜிக்குத் தெரியும். ஆனால், சிவாஜிதான் தன்னைப் பெண் பார்க்க வந்தவர் என்பது அவருக்குத் தெரியாது. அதேசமயம், சிவாஜியால் இயல்பாக இருக்கமுடியாது. ஒருகட்டத்தில் ஊரும் தெருவும் ’ஒருமாதிரி’யாக இணைத்துப்பேசத் தொடங்கும். இதை எம்ஜிஆரிடமே கிண்டல் செய்ய, அடித்துப் போடுவார். கைது செய்யப்படுவார். ஜெயிலுக்குப் போவார். ‘கவலைப்படாதே. உன்னையும் நம் மகனையும் என் நண்பன் ஜீவா காப்பாற்றுவான்’ என்பார் எம்ஜிஆர்.


ஆனால், அண்ணா அண்ணா என்றழைக்கும் நண்பனின் மனைவியை, காதலியாகவே பார்ப்பார் சிவாஜி. ஒருகட்டத்தில், நேரடியாகவே விவரம் சொல்ல, ‘பெண் பார்க்க வந்த ஒரே காரணத்தால், இப்படி நினைக்கலாமா?’ என்று கோபமாவார் அந்தப் பெண்மணி. ஆனாலும் அவளை அடையும் எண்ணம் சிவாஜிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொழுந்துவிட்டெரியும். அவரும் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டவனாக, வில்லனாக மாறிக் கொண்டே இருப்பார்.


இரக்கமே இல்லாதவனாக மாறுவார். அரக்கத்தனத்தையெல்லாம் காட்டத் தொடங்குவார். சாப்பாட்டுக்கு வழியிருக்காது. ‘என்னுடன் வா. ஓடிப்போய்விடலாம்’ என்று அழைப்பார் சிவாஜி. வீட்டை காலி செய்ய ஏற்பாடுகள் செய்வார். ‘இப்போதாவது வா. ஓடிவிடலாம். உன்னையும் உன் குழந்தையையும் காப்பாற்றுகிறேன்’ என்பார்.


எங்கோ ஓர் திண்ணையில் வசிப்பார் எம்ஜிஆரின் மனைவி. பிச்சைக்காரர்களுடன் பிச்சைக்காரராக தங்குவார். பையனுக்கு உடல்நலம் மோசமாகிவிடும். ‘பணம் தரேன். பையனைக் காப்பாத்து. ஆனா என் ஆசைக்கு இணங்கு’ என்று டார்ச்சர் பண்ணுவார் சிவாஜி. ஆனால் எம்ஜிஆரின் மனைவி மசியமாட்டார். இவையெல்லாம் தெரிந்தே அதே தெருவில் உள்ள சொக்கி என்பவள், சிவாஜியைக் காதலிப்பாள். ஆனால் அவளை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் சிவாஜி.

கடைசியாக, சிவாஜியைத் தேடி வருவார் எம்ஜிஆரின் மனைவி. அப்போது இருவருக்கும் வாக்குவாதம். கடவுளை நக்கலடித்தும் பேசுவார். வெளியே இடி, மின்னல். அந்த மின்னல் சிவாஜியின் கண்களைப் பறித்துவிடும். பாக்கெட்டில் உள்ள பணத்தையெல்லாம் கொடுத்து, பையனைக் காப்பாற்றிக்கொள் என்று புத்தி தெளிவார்.


அங்கிருந்து கிளம்பி புலம்பியபடி செல்வார் சிவாஜி. எம்ஜிஆர், சிறையில் இருந்து விடுதலையாகி ரயிலில் வந்து இறங்குவார். வீட்டுக்கு வருவார். எல்லா விஷயமும் தெரியவரும். சிவாஜியைக் கொல்ல முடிவு செய்வார். தட்டுத்தடுமாறி, சிவாஜி தண்டவாளத்துக்கு வருவார். எந்த தண்டவாளத்தில் சாகப் போய், எம்ஜிஆர் வந்து காப்பாற்றினாரோ... அதே தண்டவாளம். ஆனால் எம்ஜிஆர் தண்டவாளத்தில் இருந்து சிவாஜியைத் தூக்கிவெளியே போடுவார். அடித்து உதைப்பார். அப்போது அங்கே வரும் சொக்கி, உண்மைகளையெல்லாம் சொல்லுவாள்.

அதைக் கேட்ட எம்ஜிஆர், சிவாஜியை மன்னிப்பார். மனைவியையும் மகனையும் பார்ப்பார். எம்ஜிஆர் தன் குடும்பத்துடன் இணைவார். சொக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்ல, காற்றில் கைவீசியபடி நடந்து செல்வார் சிவாஜி. ‘சுபம்’ என்று டைட்டிலுடன் படம் நிறைவுறும்.


டைட்டிலில் எம்.ஜி.ராமச்சந்தர், சிவாஜி கணேசன் என்று இருவரின் பெயரையும் ஒரே ஸ்க்ரீனில் போடுகிறார்கள். படத்தின் திரைக்கதையையும் வசனத்தையும் எழுத்தாளர் விந்தன் எழுதியிருப்பார். விந்தன், தஞ்சை ராமையா தாஸ், கா.மு.ஷெரீப், மருதகாசி முதலானோர் பாடல்களை எழுத, படத்தில் பத்துப்பனிரெண்டு பாடல்கள் இருக்கின்றன. கே.வி.மகாதேவன் இசையமைக்க, டி.ஆர்.ராமண்ணா இயக்கியிருந்தார்.


நெகடீவ் ரோலில், கனகச்சிதமாக தன் நடிப்பையும் நடிப்பின் முத்திரையையும் பதித்திருந்தார் சிவாஜி. எம்ஜிஆர், தன் முத்திரையை திரையில் காட்டாத காலம் அது. தனக்கென ஒரு பாணியை எம்ஜிஆர் வகுத்துக் கொள்ளாத காலம் அது. ஆனாலும் அவரின் தேர்ந்த நடிப்பும் கச்சிதம். ஆனால் படம் முழுக்க சிவாஜி வருகிறார். ஜெயிலுக்கு போன எம்ஜிஆர், படம் முடியும் போதுதான் வருகிறார்.

இந்தப் படம் வந்த தருணத்தில், அதாவது படம் ரிலீசான போதா... பிறகா... தெரியவில்லை. எம்ஜிஆர் ரசிகர்களும் சிவாஜி ரசிகர்களும் முட்டிக் கொண்டார்கள். தியேட்டரில் ஏக கலாட்டா. படம் திரையிடப்படாமல் பாதியிலேயே நின்றது. படத்தின் பிலிம் சுருள் எரிக்கப்பட்டது என்றெல்லாம் ஏகப்பட்ட கதைகளும் திரைக்கதைகளும் சொல்லுவார்கள். ஆனால், இதேகாலகட்டத்தில் வந்த படங்கள், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகள் வரைக்கும் கூட புத்தம்புதிய காப்பி என்று ஒரு ரவுண்டு வந்தன. ‘கூண்டுக்கிளி’ மட்டும் மிஸ்ஸிங்.

1954ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி ‘கூண்டுக்கிளி’ வெளியானது. படம் வெளியாகி, 66 வருடங்களாகின்றன.

தமிழ்த் திரையுலகில், ஒரே எம்ஜிஆர், ஒரே சிவாஜி என்பார்கள். அதேபோல், எம்ஜிஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே ‘கூண்டுக்கிளி’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x