

விஜய் தொலைக்காட்சி 'பாண்டியன் ஸ்டோர்' முல்லைக்கு எளிமையான முறையில் நேற்று அவரது வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நெருக்கமான தோழிகள், மாப்பிள்ளை, பெண் வீட்டார் மட்டுமே ஆஜர் ஆகியிருந்த இந்த நிகழ்வு இன்ஸ்டாகிராம் பக்கம் வழியே கசிய 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முல்லையாக நடிக்கும் சித்ராவுக்கு வாழ்த்துகள் குவியத் தொடங்கியுள்ளன.
மாப்பிள்ளை ஹேமந்த் ரவி. சென்னைக்காரர். பிசினெஸ்மேன். வீட்டில் அப்பா, அம்மா சம்மதத்துடன் தான் தனது வருங்கால கணவரைத் தேர்வு செய்திருக்கிறாராம், சித்ரா. தொடர்ந்து சீரியல் நடிப்பு, ஈவண்ட்ஸ் என பரபரப்பாக இருந்து வந்த சித்ரா இந்த லாக்டவுன் நேரத்தில் தன்னை சீரியல்களில் கொண்டாடும் வாசகிகளின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பதை சமீபத்திய வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில், திரும்பவும் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கியதும் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்த 4 மாத இடைவெளியில் வீட்டில் தொடர்ந்து திருமண பேச்சுவார்த்தை எழ, ஒரு வழியாக அதுக்கும் பச்சைக் கொடி காட்ட வீட்டில் உள்ள பெரியவர்கள் முழு மூச்சாக இறங்கி திருமண வைபவத்துக்கு ஆயத்தமாகியுள்ளனர்.
தற்போதைய கரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஒரு வழிக்கு வந்ததும் திருமண தேதியை அறிவிக்கலாம் என இரு வீட்டாரும் பேசியுள்ளனராம். சின்னத்திரை சகாக்கள் அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பு வைத்து தனது திருமண வைபவத்தை கொண்டாட முடிவெடுத்திருக்கிறாராம், சித்ரா.