

'சுல்தான்' படத்தின் நிலைத் தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
'ரெமோ' இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
திண்டுக்கல் ஊரைச் சுற்றி சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளது படக்குழு. இதன் இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்த போது, கரோனா அச்சுறுத்தல் தொடங்கவே அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது.
தற்போது தயாராகி இருக்கும் படங்களை எல்லாம் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடி வெளியீடு என அறிவித்தவுடனே பல படங்கள் தங்களுடைய ஓடிடி வெளியீடு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதில் 'சுல்தான்' படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் பரவியது. இது தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"'சுல்தான்' திரைப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பும் பெரும்பாலான படத்தொகுப்பும் முடிந்துவிட்டது. இந்த கோவிட் பிரச்சனைக்கு நடுவில், மீதமிருக்கும் பணிகளை முடிக்கும் சாத்தியங்களைப் பார்த்து வருகிறோம். ட்ரீம் வாரியர் தயாரித்திருக்கும் மிகப்பிரம்மாண்டமான முழுமையான பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக இது இருக்கும். உங்கள் அனைவருக்கும் தெரிந்ததைப் போல இப்போதைக்கு வெளியீடு திட்டம் எதுவும் இல்லை"
இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்