

தமிழ் சினிமாவில் புத்தாயிரத்துக்குப் பிறகு அறிமுகமான திரைப் படைப்பாளிகளில் நகைச்சுவைத் திரைப்படங்களாலேயே தனிக் கவனம் ஈர்த்தவரும் தன் அனைத்துப் படங்களையும் நகைச்சுவையையே மையமாகக் கொண்டவையாக உருவாக்கியிருப்பவருமான இயக்குநர் எம்.ராஜேஷ் இன்று (ஆகஸ்ட் 24) பிறந்த நாள் கொண்டாடுகிறார்.
கோவில்பட்டியில் பிறந்து பொறியியல் பட்டம் பெற்றவரான ராஜேஷ், இயக்குநர் அமீரின் அறிமுகப் படமான 'மெளனம் பேசியதே'விலும் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 'முத்தமிடலாமா' தொடங்கி நான்கு படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றி சினிமா கற்றார். 2009இல் வெளியான 'சிவா மனசுல சக்தி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
ஜீவாவும் புதுமுக நடிகை அனுயாவும் சந்தானமும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த 'சிவா மனசுல சக்தி' விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. 'ராம்', 'ஈ', 'கற்றது தமிழ்' உள்ளிட்ட சீரியஸ் திரைப்படங்களின் மூலம் நல்ல நடிகர் என்ற மரியாதையைப் பெற்றிருந்த நடிகர் ஜீவா நகைச்சுவையிலும் அபார திறமை வாய்ந்தவர் என்று நிரூபித்து அவருக்கும் புதிய பாதை அமைத்துக் கொடுத்தது. அதோடு நகைச்சுவை நடிகர் சந்தானத்துக்கும் முக்கியத் திருப்புமுனையை அமைத்துக் கொடுத்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன.
ராஜேஷின் இரண்டாம், மூன்றாம் படங்களான 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்களும் இதே பாணியில் நகைச்சுவையை மையப்படுத்திய கலகலப்பான திரைப்படங்களாக மிகப் பெரிய வெற்றியையும் பரவலான விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றன.
இவற்றில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ராஜேஷின் ஆகச் சிறந்த படம் என்று சொல்லலாம். பல காரணங்களுக்காக அது எல்லாத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. நாயகன் ஆர்யா, நகைச்சுவை நடிகர் சந்தானம் மட்டுமல்ல நாயகி நயன்தாரா, நாயகனின் அம்மா, அண்ணன், நாயகியின் அப்பா என கிட்டத்தட்ட அனைத்துக் கதாபாத்திரங்களுமே வெகு சிறப்பாக நகைச்சுவைக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பார்கள்.
ஆர்யா- நயன் இடையிலான காதல் காட்சிகளிலும் ஒரு நகைச்சுவை அம்சம் இழையோடும். நயன், ஆர்யாவைக் கிண்டலடித்துவிட்டு அல்லது வெறுப்பேத்திவிட்டு சிரிப்பது, அவர் மீது பரிவு காட்டுவது என அந்தக் காதலே ஒரு அழகான புதுமையான விஷயமாக இருக்கும். நயன்தாராவின் நகைச்சுவைத் திறன் சிறப்பாக வெளிப்பட்ட படம் என்று இந்தப் படத்தைச் சொல்லலாம். குடும்ப உறவுகளுக்கு இடையிலான காட்சிகளிலும் சென்டிமென்ட்டைவிட நகைச்சுவையே தூக்கலாக இருக்கும்.
இந்த மூன்று படங்களிலுமே சந்தானம் நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி கிட்டத்தட்ட இணை நாயகன் என்று சொல்லும் அளவுக்கு படத்தின் பெரும்பகுதிக் காட்சிகளில் முக்கிய இடம் பெற்றிருப்பார். ராஜேஷ் - சந்தானம் நகைச்சுவைக் கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றி பெற்ற கூட்டணிகளில் ஒன்று,
இதற்குப் பிறகு ராஜேஷ் இயக்கிய நான்கு படங்களும் வெற்றி பெறவில்லை. இவற்றில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ஆகிய படங்களில் சந்தானம் இருந்தார். படங்கள் ஒட்டுமொத்தமாகத் திருப்தியை அளிக்கவில்லை என்றாலும் எப்போது பார்த்தாலும் சிரிக்க வைக்கும் அளவு பல சிறப்பான நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 'கடவுள் இருக்கான் குமாரு', 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய இரண்டு படங்களில் நகைச்சுவைக் காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
மது அருந்துவதையும் பெண்களை அளவுக்கதிகமாக கிண்டலடிப்பதையும் ராஜேஷ் தன் திரைப்படங்கள் வாயிலாக ஊக்குவிக்கிறார் என்ற விமர்சனம் பெரும்பாலான விமர்சகர்கள், ரசிகர்களால் வைக்கப்படுகிறது. மது அருந்துவதைப் பொறுத்தவரை 'அழகுராஜா' விதிவிலக்கு. ஆனால் இந்த விமர்சனத்தை அவர் பரிசீலித்து மாற்றிக்கொள்ள முயன்றால் அவரால் இன்னும் தரமான பொழுதுபோக்குப் படங்களை வழங்க முடியும்.
ஆனால் இந்த விமர்சனங்களைத் தாண்டி முழுக்க முழுக்க நகைச்சுவையையும் கலகலப்பான பொழுதுபோக்கையும் வாரி வழங்கும் படங்களைக் கொடுத்தவர் அந்த வகையிலான படங்களுக்கு ஒரு புதிய பாணியை உருவாக்கியவர் என்று ராஜேஷைச் சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் கலைஞர்கள் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள். சில நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாகவும் கதையின் நாயகர்களாகவும் நடித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு முன்னணி நட்சத்திரமோ வளர்ந்துவரும் நாயக நடிகரோ கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நகைச்சுவை நடிகருக்கு நாயகனுக்கு இணையான முக்கியத்துவத்துடன் திரைக்கதை அமைக்கும் போக்கு ராஜேஷால் பிரபலமடைந்தது. அதற்கு முன்பும் 'சபாஷ் மீனா', 'உள்ளத்தை அள்ளித்தா' போன்ற படங்களில் இந்த விஷயம் இருந்தது என்றாலும் ராஜேஷின் அனைத்துப் படங்களிலும் இது பொதுவான அம்சமாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட படங்களில் கவுன்ட்டர் கொடுப்பது, ஒருவரை ஒருவர் கலாய்ப்பது, சமகால நடப்பு விவகாரங்கள் பற்றிய பகடி ஆகியவற்றுடன் தொடர்ந்து நகைச்சுவைக் கலகலப்புப் படங்களைக் கொடுத்து வந்தவர் என்பதே ராஜேஷின் தனி முத்திரை. பொன்ராம் இயக்கத்தில் அவர் வசனம் எழுதிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்துக்கும் இது பொருந்தும். அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றி ராஜேஷின் அலாதியான நகைச்சுவைத் திறமைக்குச் சான்று. நகைச்சுவை நடிகர்கள் மட்டுமல்ல ராஜேஷின் வசனங்களும் திரைக்கதை உத்திகளும்தான் அவருடைய படங்களை கலகலப்பானவை ஆக்குகின்றன என்பதை இதன் மூலம் உணர்ந்துகொள்ளலாம்.
இதைத் தவிர நகைச்சுவையை மையப்படுத்திய படங்கள் எனும்போது அடிப்படைக் கதையின் சாராம்சத்திலும் திரைக்கதையில் கூடுமானவரை அனைத்துக் காட்சிகளிலும் ஏதேனும் ஒரு வகையில் நகைச்சுவையைப் புகுத்திவிடுவது ராஜேஷின் பாணி. அவருடைய படங்களில் பெரும்பாலான சீரியஸான காட்சிகளில்கூட நகைச்சுவை இருந்துவிடும். 'சிவா மனசுல சக்தி' படத்தில் நாயகனுடன் சண்டை போட்டுவிட்டு நாயகி கோபமாகச் சென்றுவிட்டபின் நாயகன் கோபத்துடன் அவள் போன திசை நோக்கி கத்துவான். அப்போது உடன் இருக்கும் நண்பன் "அவ போய் ஆறு மாசம் ஆச்சு" என்று சொல்லும்போது திரையரங்கமே வெடித்துச் சிரிக்கும்.
'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் குடும்பத்துடன் சண்டை போட்டுக்கொண்டு நாயகன் வீட்டை விட்டு வெளியேறும் சீரியஸ் காட்சியில் அவருடைய அண்ணன் பின்னாடியே வருவதை உணர்ந்து திரும்பி நிற்பார். "போய்விடாதே வீட்டுக்கு வா" என்று அழைக்கத்தான் வந்திருப்பார் என்று பார்த்தால், அப்போது மழை பெய்து கொண்டிருப்பதால் கையில் வைத்திருக்கும் குடையை தம்பியிடம் கொடுத்துவிட்டு "மழை பெய்யுதுன்னு நீ திரும்பி வந்துடக் கூடாதுன்னுதான் குடை எடுத்துட்டு வந்தேன்" என்பார் அண்ணன்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் குடும்பங்களின் சண்டையால் காதல் தோற்றுவிட்ட சோகத்தில் அமர்ந்திருப்பார் நாயகன். அப்போது அவருடன் தப்பித்துச் செல்வதற்காக வந்த நாயகி ஒரு சிறு பெண்ணைத் தூது அனுப்புவார். அந்தச் சிறுமி நாயகனிடம் வந்து, "அண்ணா உங்கள அக்கா கூப்பிடுறாங்க" என்பார். அப்போது சோகத்தை முகத்தில் வைத்துக்கொண்டே அது வேறோரு பெண் என்று நினைத்துக்கொண்டு, "உங்க அக்கா அழகா இருப்பாங்களா" என்பார் நாயகன்.
இப்படிப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட அவருடைய எல்லாப் படங்களிலும் இருக்கும். "என் பணி சிரிக்க வைப்பதே" என்பதில் சமரசமோ நகைச்சுவை பற்றிய மேட்டிமைப் பார்வையோ இல்லாமல் இதைச் செய்ய முடியாது. ராஜேஷின் மற்றுமொரு தனி அடையாளம் வெகுஜன நகைச்சுவை மீதான இந்த மதிப்பும் அதற்கான திறமையைக் கைவிடாமல் இருப்பதும்தான்.
முதல் மூன்று படங்களையும் வெற்றிப் படங்களாகக் கொடுத்து தமிழில் முழுக்க முழுக்க கலகலப்பை வாரி வழங்கும் நகைச்சுவை மையப் படங்களுக்கு புதிய பாணியையும் போக்கையும் அமைத்துக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் அதேபோல் மேலும் பல சிறப்பான படங்களைக் கொடுக்க வேண்டும் என்று இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.