

தமிழில் உருவாகும் 'அந்தாதூன்' ரீமேக்கில், முக்கியக் கதாபாத்திரங்களில் கார்த்திக் மற்றும் யோகி பாபு நடிக்கவுள்ளனர்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். மோகன் ராஜா இயக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிவார் எனத் தெரிகிறது.
இந்தப் படத்தில் பிரசாந்த் உடன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க கார்த்திக் மற்றும் யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 'அந்தாதூன்' படத்தில் தபுவின் கணவராக அனில் தவண் நடித்திருப்பார். அந்தக் கதாபாத்திரத்தில் தமிழில் கார்த்திக் நடிப்பார் எனத் தெரிகிறது. படத்தின் முக்கியக் கதாபாத்திரமான தபு கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் இப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.