

'தாழ் திறவா' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் பரணி சேகரன் தெரிவித்துள்ளார்.
ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தாழ் திறவா'. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஆகஸ்ட் 21) மாலை வெளியிடப்பட்டது. சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இதர படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்க உள்ளது.
பர்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'தாழ் திறவா' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் பரணி சேகரன் கூறியிருப்பதாவது:
"இது மர்மங்கள் நிறைந்த திகில் படம். அடுத்த காட்சி என்ன, என்பதை யாராலும் ஊகிக்க முடியாத அளவில் இருக்கும். தொல்பொருள் ஆய்வை மையப்படுத்திய படம் என்பதால், இதற்காக நிறைய முன் தயாரிப்பு தேவைப்பட்டது. .
இதில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ தமிழில் 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடித்துள்ள லிசா என்ற பெண்ணும், லலித் என்ற பையனும் நடித்துள்ளார்கள். இரண்டு குட்டீஸும் கண்டிப்பாக பார்வையாளர்களைக் கவர்வார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ்.
ஒரு சின்ன ஊருக்குள் தொல்பொருள் சோதனை ஒன்று நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரிகம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரி செய்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. ஊட்டி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.
இந்தப் படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கியமான பங்கு வகிக்கும். 'ஆயிரத்தில் ஒருவன்', 'கடாரம் கொண்டான்' உள்ளிட்ட பல படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்த செந்தில் தலைமையில் 'தாழ் திறவா' கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன".
இவ்வாறு பரணி சேகரன் தெரிவித்துள்ளார்.
'தாழ் திறவா' படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளர்களாக சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ், எடிட்டராக மணிகண்டன், கலை இயக்குநராக ராகவா குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.