எத்தனை தடைகள் வந்தாலும் 'மாநாடு' படத்தை முடிப்பேன்: சுரேஷ் காமாட்சி உறுதி

எத்தனை தடைகள் வந்தாலும் 'மாநாடு' படத்தை முடிப்பேன்: சுரேஷ் காமாட்சி உறுதி
Updated on
1 min read

எத்தனை தடைகள் வந்தாலும் 'மாநாடு' படத்தை தயாரித்து முடிப்பேன் என்று சுரேஷ் காமாட்சி உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்து வரும் 'மாநாடு' படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சிக்கு நேற்று (ஆகஸ்ட் 19) பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சமூக வலைதளத்தில் உள்ள சிம்பு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவே #Maanaadu என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்டானது.

தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் சுரேஷ் காமாட்சி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

"நேற்றைய நாளை மிகச் சிறப்பாக்கிய அன்பின் சிம்புவும், அவரது வெறித்தனமான ரசிகர்களுக்கும் மனதின் ஆழத்திலிருந்து நன்றிகள். 'மாநாடு' படத்தை சிம்பு என்ற ஒரு சகோதரனோடு தான் தொடங்கினேன். ஆனால் இன்று அவர் எனக்குப் பரிசளித்திருப்பதோ பல லட்சக்கணக்கான சகோதரர்களை. அத்தனை பேருக்கும் மனப்பூர்வ நன்றிகள். நன்றி மட்டும் போதாது. 'மாநாடு' நம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவேன்.

எத்தனை தடைகள் வந்தாலும் கடந்து மாநாடு படத்தை வெற்றிப்படமாகத் தருவதே, நான் பதில் செய்யும் நன்றியாக இருக்க முடியும். செய்வோம், இணைந்தே வெல்வோம். மிகப்பெரிய நம்பிக்கையை ஒரு தயாரிப்பாளனான எனக்கு ஏற்படுத்தியுள்ளீர்கள். இந்த டானிக்கை அருந்திய பலத்தோடு எதிர் வரும் நாட்களை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்கிறேன்"

இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in