எஸ்.பி.பி என்பது ஒரு பெயரல்ல; அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து: சிம்பு

எஸ்.பி.பி என்பது ஒரு பெயரல்ல; அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து: சிம்பு
Updated on
1 min read

எஸ் பி பி என்பது ஒரு பெயரல்ல.அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து என்று சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்துவரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது. இனிமை என்ற வார்த்தையை உணர்வுப் பூர்வமாக உணர அவர் பாடக் கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர்.

இன்று மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் வரத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டுதல் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும். எஸ் பி பி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவரின் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்.

லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும்.

நம் 'பாடும் நிலா' எழுந்து வரவேண்டி நம் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி, நாளை 20-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ் பி பி அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்"

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in