

எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
எஸ்.பி.பிக்கு தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (ஆகஸ்ட் 16) எஸ்.பி.சரண் வெளியிட்ட வீடியோவில், அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவருடைய உடல்நிலை குறித்த தகவல் வெளியானதிலிருந்து, இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்காகப் பிரார்த்திக்குமாறு சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்தனர். பலரும் அவருடன் பணிபுரிந்த நினைவலைகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
தற்போது எஸ்.பி.பி உடல்நிலை குறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் பேசியிருப்பதாவது:
"எஸ்.பி.பி ரசிகர்கள் என்று சொன்னால், மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் அவருடைய இனிமையான குரலால் பாதிக்கப்பட்டவர்களே. இந்த 2 தினங்களும் நமக்கு இருண்ட தினங்களாகவே இருக்கின்றன. மூச்சுவிடாமல் பாடக் கூடியவர், மூச்சு கூட விட முடியாமல் படுக்கையில் பிராணவாயு உடன். நமக்கு எல்லாம் இன்னொரு பிராணவாயுவாக இருப்பது அவருடைய பாடல்கள். காதலால் இரவு தூக்கம் இழந்தவர்கள் லட்சம் பேர் எனில், எஸ்.பி.பியின் பாடல்களால் இரவு தூக்கம் கலைந்தவர்களும், மனதின் துக்கம் கலைந்தவர்களும் கோடான கோடி பேர்.
செய்திகளை முந்தி தருவதிலே ஊடகங்களுக்கு இடையே ஒரு மிகப்பெரிய போட்டி இருக்கிறது. அது ஒரு சில நேரத்தில் விபரீதமாகவும் முடிந்துவிடுகிறது. அப்படி வந்த ஒரு செய்தி மனதைப் பிணமாகிவிட்டது. ஊடக நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
நீங்கள் வெளியிடும் செய்தி நல்லதாக இருந்தால், 4 பேரைக் கூட கலந்தோலசிக்காமல் வெளியிடுங்கள். அது ஒரு ஊக்க மருந்தாகவே இருக்கும். அதுவே ஒரு துக்கச் செய்தியாக இருந்தால் தயவு செய்து இருமுறை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு வெளியிடுங்கள் என்பது என் வேண்டுகோள்.
வா பாலு, எழுந்துருச்சு வா என்று ஒரு இசை அழைக்கிறது. இசைப்புயலோ கூட்டுப் பிரார்த்தனைக்கு அன்பாக அழைக்கிறது. இசையறியாமல், பாட்டையறியாமல் வெறும் ரசிகர்களாகிய நாம், எஸ்.பி.பி என்பவர் பாடகர் மட்டுமல்ல அன்பானவர், பண்பானவர், யாருடைய மனதை நோகடிக்காத ஒரு மகன்.
அவர் மீண்டு நம் இதய மேடைகளில் உலா வர இரு கரங்களை அல்ல, நம் இதயங்களைக் கூப்பி பிரார்த்தனை செய்வோமாக. எஸ்.பி.சரணிடம் பேசும் போது உலகத்தில் உள்ள சிறந்த மருத்துவர்களை வைத்துக் கொண்டு என்னென்ன மருத்துவம் கொடுக்க முடியுமோ அப்பாவுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையுடன் இருக்கிறேன். மருத்துவர்களும் நம்பிக்கை கொடுத்தார்கள். அப்பாவின் உடலும் மருத்துவத்துக்குத் தேறி வருகிறது"
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.