

'ஓ காதல் கண்மணி' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நித்யா மேனன்.
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இயக்கத்தில் வெளியான படம் 'ஓ காதல் கண்மணி'. இப்படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலையும் குவித்தது.
'ஓ காதல் கண்மணி' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான் ஆகியோர் நாயகனாக நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'ஓ காதல் கண்மணி' படத்தைப் போலவே டப்பிங் இல்லாமல் நேரடி ஒலிக்கலவை மூலமாகவே இப்படத்தையும் பண்ண திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம். இதனால் நல்ல தமிழ் பேச தெரிந்த நாயகி இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில், இன்னொரு நாயகியாக மீண்டும் நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். விரைவில் இப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.