அடுத்த 5 ஆண்டுகளுக்கு இசையில் கூடுதல் கவனம்: ஹிப் ஹாப் ஆதி திட்டம்

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இசையில் கூடுதல் கவனம்: ஹிப் ஹாப் ஆதி திட்டம்
Updated on
1 min read

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இசையில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.

'ஹிப் ஹாப் தமிழன்' ஆல்பத்துக்குப் பிறகு, 'நான் ஒரு ஏலியன்' என்ற புதிய ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் ஹிப் ஹாப் ஆதி. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின வெளியீடாக யூடியூப் தளத்தில் இந்த ஆல்பம் வெளியாகவுள்ளது. இதிலிருந்து ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

'நான் ஒரு ஏலியன்' ஆல்பத்தை விளம்பரப்படுத்தும் வகையில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியொன்று அளித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. அதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இசைத் துறையில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"2020-ம் ஆண்டு சுயாதீன இசையில் மீண்டும் பெரிய அளவில் துவங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஏன், அதற்கான அனைத்தும் பாடல்களும் கொண்ட இசை ஆல்பமும் தயாராக உள்ளது. ஆனால் கரோனா தொற்று, ஊரடங்கால் அந்த யோசனையை அடுத்த நிலைக்கு எடுத்து சேன்று அனைத்து வேலைகளையும் கடந்த சில மாதங்களில் முடித்திருக்கிறோம்.

சமீபத்தில் எங்களின் அண்டர்கிரவுண்ட் ட்ரைப் முன்னெடுப்பும் வெற்றியடைந்தது. மக்கள் தங்கள் திறமைகளைக் காட்டுவதற்கு நான் வழி செய்துள்ளோம். இன்னும் சில வருடங்களில் ஹிப் ஹாப் தமிழாவை விட பெரிய கலைஞர்கள் பலர் நம்மிடையே இருக்கலாம். நான் நனவாக்க நினைக்கும் கனவு இதுதான்.

என் அடுத்த ஐந்து வருடங்கள் ஒரு சுயாதீன இசைத் துறையை உருவாக்குவதில் தான் இருக்கும். பல திறமையான கலைஞர்களுடன் நான் ஒருங்கிணைத்து வருகிறேன். அவர்களை இசை நிறுவனத்துடன் இணைத்து அவர்களது இசையை உலகின் மற்ற இடங்களுக்கும் கொண்டு செல்ல முயற்சித்துள்ளேன்.

இந்த விஷயத்தில் எனக்குப் பெரிய உந்துதல் லாடின் ட்ராப் இசை தான். அவர்களும் நம்மைப் போலத்தான். பத்து வருடங்களுக்கு முன் அந்த இசைக்கென ஒரு துறை கிடையாது. ஆனால் இன்று, பில்போர்ட் டாப் 10 பாடல்கள் பட்டியலில் அவர்களின் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் ஒரு சர்வதேச இசைத்துறையாக வளர்ந்துள்ளனர். ஏன் தமிழ் ஹிப்ஹாப்பும் அப்படி ஆக முடியாது?"

இவ்வாறு ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in