

நிஹாரிகா - சைதன்யா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நிஹாரிகா. தற்போது தமிழில் அசோக் செல்வன் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு நிஹாரிகாவுக்கு அவருடைய வீட்டில் மாப்பிள்ளையை முடிவு செய்தனர். அவருடைய பெயர் சைதன்யா. ஹைதராபாத்தில் மென்பொறியாளராக இருக்கும் சைதன்யா, குண்டூர் பகுதி ஐஜியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று (ஆகஸ்ட் 13) மாலை ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சைதன்யா - நிஹாரிகா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் கரோனா அச்சுறுத்தலால் இருவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் சைதன்யா - நிஹாரிகா தம்பதியினருக்கு தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்து வருகிறார்கள்.