

சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - மகேஷ் பாபு இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.
#GreenIndiaChallenge என்பது தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதில் ஆகஸ்ட் 9-ம் தேதி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது பிறந்த நாளை முன்னிட்டு பங்கேற்றார். #GreenIndiaChallenge என்ற சவாலில் பங்கேற்று செடி நட்டி, அதே போன்றதொரு சவாலை விஜய்க்கு விடுத்தார்.
அந்தச் சவாலை ஏற்றுக் கொண்ட விஜய் செடி நட்டி அதன் புகைப்படத்தை வெளியிட்டார். ஆனால், யாருக்கும் சவால் விடுக்கவில்லை. விஜய் செடி நட்டவுடன், ரசிகர்களும் செடி நட்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த #GreeenIndiaChallenge மூலம் விஜய் - மகேஷ் பாபு நட்பு பாராட்டியுள்ளனர். இதனை வைத்து சமூக வலைதளத்தில் ஒரு வதந்தி உலவி வருகிறது. என்னவென்றால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள் என்று தகவலை வெளியிட்டுள்ளனர். எப்படியென்றால் தமிழில் விஜய் வில்லனாக மகேஷ் பாபு, தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விஜய் என நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரித்த போது, "விஜய் - மகேஷ் பாபு இருவருமே நெருங்கிய நண்பர்கள். ஆனால், இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் முன்பு அளித்த பேட்டியில் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் எனச் சொல்லியிருப்பார். அதையும், #GreenIndiaChallenge-யையும் வைத்து இப்படியொரு செய்தியை உருவாக்கியுள்ளனர். இதில் உண்மையில்லை" என்று தெரிவித்தார்கள்.