

தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையிலேயே நடிகர் கவுண்டமணியை சிவகார்த்திகேயன் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
'ரஜினி முருகன்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா தயாரிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பாக கவுண்டமணியை சந்தித்ததாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து புதுப்படத்தில் கவுண்டமணி முக்கிய பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இச்செய்தி குறித்து சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, "சிவகார்த்திகேயனோடு எல்லாம் கவுண்டமணி நடிக்கவில்லை. கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர் சிவகார்த்திகேயன். அவரை சந்தித்து பேச வேண்டும் என்பது சிவாவின் நீண்ட நாள் ஆசை.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படச் சமயத்தில் சத்யராஜ் மூலமாக கவுண்டமணியை பார்க்க முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அச்சமயத்தில் கவுண்டமணி படங்களில் மும்முரமாக இருந்ததால் சந்திக்க முடியாமல் போனது.
தற்போது இருவருக்குமே நேரம் ப்ரீயாக இருக்கிறது என்றவுடன் சந்தித்தார்கள். இருவரும் சுமார் 1 மணி நேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். கவுண்டமணி தொலைக்காட்சியில் சிவாவுடைய நிகழ்ச்சிகள், படக்காட்சிகள் எல்லாம் பார்த்திருப்பதாகவும், நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்.
ஊதா கலர் ரிப்பன் பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சிவாவிடம் தெரிவித்தார் கவுண்டமணி. இது தான் நடந்தது. படத்தைப் பற்றி எல்லாம் இருவரும் விவாதிக்கவே இல்லை" என்று தெரிவித்தார்கள்.