42 ஆண்டுகள் நிறைவு: பாரதிராஜாவின் வாழ்த்தால் நெகிழ்ந்த ராதிகா

42 ஆண்டுகள் நிறைவு: பாரதிராஜாவின் வாழ்த்தால் நெகிழ்ந்த ராதிகா
Updated on
1 min read

42 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பாரதிராஜாவின் வாழ்த்தால் நெகிழ்ந்து போயுள்ளார் ராதிகா சரத்குமார்.

ஆகஸ்ட் 10-ம் தேதி திரையுலகில் அறிமுகமாகி தனது 42 ஆண்டுகளை நிறைவு செய்தார் ராதிகா சரத்குமார். அன்றைய தினம்தான் பாரதிராஜா இயக்கத்தில் சுதாகர், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் 'கிழக்கே போகும் ரயில்' படம் வெளியானது.

முன்னணி நடிகை, தயாரிப்பாளர், சின்னத்திரையில் அறிமுகம், தொகுப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் தொடர்ச்சியாக தன்னை நிரூபித்து வருகிறார் ராதிகா சரத்குமார். அன்றைய தினம் அவருக்குத் திரையுலகினர் பலரும் வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

தற்போது ராதிகாவை நாயகியாக அறிமுகப்படுத்திய பாரதிராஜா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"என் இனிய தமிழ் மகளே, கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது மழலையை ஏற்றிக் கொடி அசைத்துப் பயணிக்க வைத்தேன். 42 வருடமாகிறது. என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை. பால்வெளித் திரளுக்கு எல்லை இல்லை. உன் திரை உலகப் பயணத்துக்கும் உன் பாசத்துக்கும் முடிவேதும் இல்லை. வாழ்த்துகள் ராதிகா".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராதிகா கூறியிருப்பதாவது:

"இதை விடச் சிறப்பாக ஒன்று அமைய முடியுமா? நான் நானாக இருப்பதற்குக் காரணம் நீங்கள் மட்டுமே. உங்களுடைய ஆசிகள்தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. பெண்களின் சாதனைகளைக் கொண்டாடாத இந்த ஆணாதிக்க உலகில் உங்கள் வார்த்தைகள் எப்போதும் போல சராசரிக்கும் மேல் உயர்ந்திருக்கிறது".

இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in