

விரைவில் அறிவியல் புனைவு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளதாக கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
'மாஃபியா' படத்துக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் நரேன். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கரோனா ஊரடங்கில் தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்து மூன்று பாடல்களை உருவாக்கி முடித்துள்ளது.
'D43' என்று அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இதனிடையே இயக்குநர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அதில், "உங்களுக்கு மிகவும் பிடித்த சமகால தமிழ் இயக்குநர்" என்ற கேள்விக்கு, "தியாகராஜன் குமாரராஜா" என்று பதிலளித்துள்ளார். மேலும், "மிகவும் பிடித்த கமல் படம்" என்ற கேள்விக்கு, "விருமாண்டி" எனத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, "எப்போது கார்த்திக் நரேன் தமிழில் ஒரு அறிவியல் புனைவுப் படத்தை எடுப்பார்?" என்ற கேள்விக்கு, "ஒரு வெப் சீரிஸ் - மிக விரைவில்" என்று கூறியுள்ளார். இதன் மூலம் கார்த்திக் நரேன் விரைவில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
மேலும் நீண்ட நாட்களாக வெளியீட்டுச் சிக்கலில் உள்ள 'நரகாசூரன்' வெளியீடு குறித்த கேள்விக்கு, கிண்டலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்திக் நரேன். 'நாட்டாமை' படத்தில் கவுண்டமனி - செந்தில் காமெடியில் நபர் ஒருவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தப் புகைப்படத்தை 'நரகாசூரன்' வெளியீடு குறித்த கேள்விக்குப் பதிலாகத் தெரிவித்துள்ளார்.