

ஒருவரோடு மற்றொருவரை ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 9-ம் தேதி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் #GreenIndiaChallenge என்ற சவாலில் பங்கேற்று செடி நட்டி, அதே போன்றதொரு சவாலை விஜய்க்கு விடுத்தார்.
அந்தச் சவாலை ஏற்றுக் கொண்ட விஜய் செடி நட்டி அதன் புகைப்படத்தை வெளியிட்டார். ஆனால், யாருக்கும் சவால் விடுக்கவில்லை. விஜய் செடி நடும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் கொண்டாடித் தீர்த்தார்கள்.
விஜய் - மகேஷ் பாபு இருவரையும் வைத்து சில ஒப்பீடுகளையும் வெளியிட்டார்கள். இதனால் சில சர்ச்சைகளை உருவானது. இதனைத் தொடர்ந்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"மகேஷ் பாபு மற்றும் விஜய் இருவருக்குமே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இயற்கைக்காக சில நல்ல விஷயங்களைச் செய்யும்போது அவர்களது ரசிகர்களும் அதனைப் பின்பற்றி நல்ல காரியங்களைச் செய்வர். நாம் இதைப் பாராட்ட வேண்டும். தயவுசெய்து ஒருவரோடு மற்றொருவரை ஒப்பிட வேண்டாம். பசுமையான பூமி என்பதே நமது லட்சியம்"
இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.