

ஈராஸ் நிறுவனத்திடம், 'ஒரு கிடாயின் கருணை மனு' இயக்குநர் சுரேஷ் சங்கையா கேள்வி எழுப்பியுள்ளார்.
2017-ம் ஆண்டு சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் சில கதாபாத்திரங்களைத் தவிர்த்து மீதி அனைவரையும் புதுமுகங்களாகவே நடிக்க வைத்திருந்தார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. பல்வேறு விருதுகளை வென்ற இந்தப் படம், இதுவரை எந்தவொரு தொலைக்காட்சியிலுமே ஒளிபரப்பப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்தது.
தற்போது ஈராஸ் நிறுவனமே இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை யாருக்கும் விற்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இன்று (ஆகஸ்ட் 12) இயக்குநர் சுரேஷ் சங்கையா தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஈராஸ் நிறுவனத்திடம் ஒரு கேள்வி ஏன் இன்னும் 'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற திரைப்படத்தை எந்த சேனலிலும் தராமல் இருக்கிறீர்கள். தங்களுக்கு வேண்டுமானால் அது குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம். ஆனால் அத்தனை கலைஞர்களின் உழைப்பு விலையற்றது"
இவ்வாறு சுரேஷ் சங்கையா தெரிவித்துள்ளார்.
'ஒரு கிடாயின் கருணை மனு' படத்துக்குப் பிறகு, தற்போது 'சத்திய சோதனை' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் சுரேஷ் சங்கையா. அந்தப் படம் கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் வெளியாகும் எனத் தெரிகிறது.