

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மூணாறு கிராமப் பஞ்சாயத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் ராஜமலை செல்லும் பகுதியில் பெட்டிமடா பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து 80-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.
நேமக்கடா பகுதியில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்த 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன. மீட்புப்பணியில் தீயணைப்பு படையினர், போலீஸார், பேரிடர் மீட்புப்படையினர் வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தற்போது வரை இதில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகிறது. இதில் பலியானோர் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக சூர்யா விடுத்துள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"கேரளா, இடுக்கி மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருப்பது வேதனை அளிக்கிறது. குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும் பிறந்த மண்ணைவிட்டுப் பிரிந்து சென்று வேலை செய்தவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்து போனது தாங்கமுடியாத துயர நிகழ்வு. நெஞ்சை உலுக்கும் இந்த இயற்கை விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்"
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்