ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன்: சுவாமிநாதன் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்
ஒரு நல்ல நண்பனை இழந்த துக்கத்தில் இருக்கிறேன் என்று தயாரிப்பாளர் சுவாமிநாதன் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லட்சுமி மூவி மேக்கர்ஸ். கே.முரளிதரன், வி.சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் மூவரும் இணைந்து இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர். இதில் சுவாமிநாதன் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 10) காலமானார்.
சுவாமிநாதனின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். தற்போது சுவாமிநாதன் மறைவுக்கு பாரதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோ குறிப்பில் பேசியிருப்பதாவது:
"சில மகிழ்ச்சியான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். சில நேரங்களில் என் துக்கங்களையும் உங்களிடையே பகிரவேண்டிய அவசியம் வந்திருக்கிறது. லட்சுமி மூவி மேக்கர்ஸ் ஒரு மிகச்சிறந்த தயாரிப்பு நிறுவனம். அதில் 3 தயாரிப்பாளர்கள். அவர்கள் தயாரிப்பில் 'கண்களால் கைது செய்' படத்தை நான் இயக்கியிருக்கிறேன்.
எல்.எம்.எம் சுவாமிநாதன், எல்.எம்.எம்.முரளி, எல்.எம்.எம் வேணுகோபால் மூவரில், என் பாசத்துக்கும் நட்புக்கும் உரிய சுவாமிநாதன் கரோனா பாதித்து இறந்துள்ளது என்னை மிகப்பெரிய துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் குடும்பத்துக்கு நான் எந்தளவுக்கு ஆறுதல் சொல்ல முடியும் என்று தெரியவில்லை.
ஆனாலும், ஒரு நல்ல தயாரிப்பாளனையும், நண்பனையும் இழந்த துக்கத்தில் இருக்கிறேன். அந்தக் குடும்பத்துக்கும், குடும்பம் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
