

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, துல்கர் சல்மான் இணைந்து நடிக்கவிருந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஓகே கண்மணி படத்தை தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இந்த வருடக் கடைசியில் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் நடிகர்களின் தேதிகள் கிடைக்காததாலும், படத்தை ஒரே நேரத்தில் தெலுங்கிலும் எடுக்க மணிரத்னம் முடிவெடுத்திருப்பதாலும், படப்பிடிப்பு தள்ளிப்போவதாகத் தெரிகிறது.
முன்னதாக இந்தப் படத்தை தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு மற்றும் நாகார்ஜூனாவோடு துவங்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது நடக்காமல் போனது. பின், கார்த்தி, துல்கர் சல்மான், நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ் என்ற கூட்டணியில் படம் தமிழில் தயாராகும் என உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியாயின.
தற்போது மணிரத்னம் படத்தை தெலுங்கிலும் எடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் துல்கர் அடுத்த சில மாதங்களுக்கு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதே போல நித்யா மேனன், தமிழில் ' 24 ' என்ற படத்திலும், கன்னடத்தில் சுதீப் படத்திலும் நடிக்கவிருக்கிறார். இருவரும் மணிரத்னம் படத்தில் மீண்டும் இணைய ஆர்வத்துடன் இருந்தாலும் இருவரின் தேதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கார்த்தியும் நடிகர் சங்க தேர்தல் வேலைகளிலும், நாகார்ஜூனாவுடன் 'தோழா' படத்தில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து 'காஷ்மோரா' படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
எனவே, மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடம் துவங்கலாம் என தயாரிப்பு தரப்பு முடிவெடுத்துள்ளது. இதனால் துல்கர், கார்த்தி, நித்யா மேனன் என அனைவரும் தங்களது தற்போதைய படங்களை முடித்துவிட்டு மணிரத்னம் படத்தில் நடிக்கலாம்.
மணிரத்னத்தின் இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.