Published : 15 Sep 2015 11:02 am

Updated : 15 Sep 2015 12:20 pm

 

Published : 15 Sep 2015 11:02 AM
Last Updated : 15 Sep 2015 12:20 PM

நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்: ஃபத்வா விதித்த அமைப்புக்கு ரஹ்மான் அழுத்தமான பதில்

'மெசஞ்சர் ஆஃப் காட்' படத்துக்கு நன்னம்பிக்கையின் அடிப்படையில்தான் இசையமைத்தேன் என்றும், யாரையும் புண்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

தன் மீது மும்பையைச் சேர்ந்த ராஸா அகாடமி என்ற அமைப்பு விதித்துள்ள ஃபத்வாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ரஹ்மான் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.


இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் 'முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்' என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியது. இது இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்துவதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த ராஸா அமைப்பு, அந்தப் படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் உட்பட பலருக்கு எதிராக ஃபத்வா விதித்தது.

சாதாரண சித்திரங்கள் குறித்தே இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், முகம்மது நபி பற்றி திரைப்படம் எடுப்பதே மிகவும் தவறானது என்று அந்த ஃபத்வாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று, தன் முயற்சிகளால் தமிழகத்துக்கும் தேசத்துக்கும் உலக அரங்கில் புகழ் ஈட்டித்தந்துள்ள ரஹ்மான் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பக்க பதிவின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார்.

"'முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்' படத்தை நான் இயக்கவோ, தயாரிக்கவோ இல்லை. அதற்கு இசை மட்டுமே அமைத்தேன். அந்தப் பணியில் கிடைத்த ஆன்மிக அனுபவங்கள் பகிர விரும்பாத தனிப்பட்ட விஷயம்" என்று ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

ராஸா அமைப்பைச் சேர்ந்த நூரி என்பவர், 'இப்படியான படத்தை ஏன் தடுக்கவில்லை' என அல்லா, என்னிடம் கேட்டால் என்ன செய்வது?' என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ரஹ்மான், "இந்தப் படத்துக்கு இசையமைக்க முடிவு செய்ததும் இதே மாதிரியான காரணத்துக்காகத்தான். ஒருவேளை அல்லாவை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கப் பெற்று, மனித இனத்தை ஒன்றிணைப்பது, தவறான புரிதல்களை சரிசெய்வது, அன்பைப் பற்றிய போதனைகளை, ஏழைகளின் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகளை பரப்புவது, எனது பெயரால் அப்பாவி மக்களை கொல்வதை விடுத்து மனித இனத்துக்கு சேவை செய்வது என்ற செய்தியை எடுத்துச் செல்லும் முகம்மதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன செய்வது?

இன்று நபிகள் குறித்த பல தவறான கருத்துக்களை இணையத்தில் காண முடிகிறது. சரியான புரிதல் இல்லாததால்தான் இந்த நிலை. இத்தகைய விஷயங்களை அன்பாலும் கனிவாலும் எதிர்கொள்ள வேண்டும்.

மேலும், காட்சி ஊடகத்தின் வாயிலாக மக்களிடம் சரியான விஷயங்களை கொண்டு சேர்த்து புரியவைக்க வேண்டும் என்றும் நான் எப்போதும் நினைத்திருந்தேன்.

மத சுதந்திரம் இருக்கும் இந்திய நாட்டில் வாழும் அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்துள்ளது. இங்கே அனைவரது நோக்கமும் அமைதியான, வன்முறையில்லாத வாழ்க்கையை வாழ்வதே.

நான் இஸ்லாமிய மார்க்கத்தின் அறிஞர் அல்ல. பாரம்பரியத்தையும், பகுத்தறிவையும் ஒரே சீராக நான் பின்பற்றுகிறேன். இங்கும், மேற்கிலும் நான் பயணிக்கிறேன், வாழ்ந்து வருகிறேன். அனைவரையும் நேசிக்க முயற்சிக்கிறேன்.

பிரச்சினையை கருணையோடும், கண்ணியத்தோடும் கையாள்வோம்; வன்முறையால் அல்ல. மன்னிப்புக் கோருவோம், உலகில் துன்புறுபவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். நபிகளின் இயல்பை பிரதிபலிப்பது போலவே பிரார்த்தனை செய்வோம்" என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்ஃபத்வா விதிப்புஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்மெசஞ்சர் ஆஃப் காட்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x