மீண்டும் 'சித்தி 2' ஒளிபரப்பு தொடக்கத்தில் மாற்றம்: பின்னணி என்ன?

மீண்டும் 'சித்தி 2' ஒளிபரப்பு தொடக்கத்தில் மாற்றம்: பின்னணி என்ன?
Updated on
1 min read

சன் டி.வி.யில் 'சித்தி 2' சீரியல் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணமும் தெரியவந்துள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

தற்போது ஊரடங்கு தளர்வுகளால் சின்னத்திரை படப்பிடிப்பு எந்தவித இடைஞ்சலுமின்றி சென்னையில் நடைபெற்று வருகிறது. அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களுமே சீரியல்களின் புதிய அத்தியாயங்களை ஒளிபரப்பத் தொடங்கிவிட்டன.

இதில் சன் தொலைக்காட்சியில் 'சித்தி 2' தவிர்த்து இதர சீரியல்கள் அனைத்துமே தங்களுடைய ஒளிபரப்பைத் தொடங்கிவிட்டன. 'சித்தி 2' சீரியலுக்குப் பதிலாக, 'நாயகி' சீரியல் இரவு 9 மணி முதல் 10 மணி வரை சுமார் 1 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் இரவு 9:30 மணிக்கு 'சித்தி 2' ஒளிபரப்பாகும் என்று தெரிவித்தார்கள். ஆனால், இப்போது மேலும் ஒரு வாரம் தள்ளி ஆகஸ்ட் 10-ம் தேதி முதலே 'சித்தி 2' ஒளிபரப்பாகவுள்ளது. அதுவரை தினமும் 'நாயகி' சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது.

இது தொடர்பாக விசாரித்தபோது, "'சித்தி 2' சீரியல் ஷூட்டிங் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதில் உள்ள கிராபிக்ஸ் பணிகள் முடியத் தாமதமாகிறது. அதை முழுமையாகச் செய்து முடித்து ஒளிபரப்பு செய்தால் போதுமானது என்று முடிவெடுத்துள்ளோம்.

ஏனென்றால் 'சித்தி 2' சீரியலுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. மீண்டும் ஒளிபரப்பு தொடங்கும்போது எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் பழைய மாதிரியே இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஆகையால் மட்டுமே மீண்டும் ஒருவாரம் தள்ளிவைத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.

அதேபோல், 'சித்தி 2' சீரியல் தொடங்கும்போது இரவு 9:30 மணிக்குதான் ஒளிபரப்பானது. பின்பு 9 மணிக்கு ஒளிபரப்பு என்று மாறியது. தற்போது மீண்டும் வழக்கமான 9:30 மணிக்கே ஒளிபரப்பாகவுள்ளது. 'சித்தி 2' ஒளிபரப்பு தொடங்கியவுடன் 'நாயகி' ஒளிபரப்பு அரை மணி நேரமாகக் குறைக்கப்படும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in