

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க மாளவிகா மோகனனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தனுஷ் பிறந்த நாளன்று (ஜூலை 28-ம் தேதி) அவருக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக மாளவிகா மோகனன், "இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ் சார். அற்புதமான ஆண்டு வரவிருக்கிறது. உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன். விரைவில் யாரேனும் நம் இருவரையும் ஒரே படத்துக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனுஷ், "நன்றி. விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறினார். இதனைத் தொடர்ந்து விரைவில் தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால், முன்னதாகவே கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்தச் சமயத்தில் படக்குழுவினர் கேட்ட தேதிகள் சரிவர அமையாததால், இந்தக் கூட்டணி இணையாமல் போயுள்ளது.
தற்போது கரோனா அச்சுறுத்தலால் அனைத்துமே மாறியுள்ளதால் கார்த்திக் நரேன் படத்தில் தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்கள். விரைவில் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.