வரலட்சுமிக்கு மக்கள் செல்வி பட்டம் ஏன்? மொழி மாற்று உரிமைக்காக நாயை நடிக்க வைத்தீர்களா?- 'டேனி' இயக்குநர் சந்தானமூர்த்தி சிறப்புப் பேட்டி 

வரலட்சுமிக்கு மக்கள் செல்வி பட்டம் ஏன்? மொழி மாற்று உரிமைக்காக நாயை நடிக்க வைத்தீர்களா?- 'டேனி' இயக்குநர் சந்தானமூர்த்தி சிறப்புப் பேட்டி 
Updated on
3 min read

'சண்டிவீரன்', 'ராஜா மந்திரி', 'மதுரை வீரன்' படங்களில் துணை, இணை இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டு 'டேனி' படத்தின் மூலம் இயக்குநராக புரமோஷன் ஆகியுள்ளார் சந்தானமூர்த்தி. கரோனா ஊரடங்கால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்பட்டாத சூழலில் ஓடிடி தளத்தில் வெளியாகும் நான்காவது தமிழ்ப் படம் என்ற பட்டியலில் 'டேனி' இணைந்துள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், ஊரடங்கிலும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த சந்தானமூர்த்தியிடம் பேசினோம்.

டேனி எந்த மாதிரியான படம்? பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையைப் பற்றிப் பேசுவது போலத் தெரிகிறதே?

ஆம். இன்றைய சமூகச் சூழலில் மூன்று வயதுச் சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரை பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர். ஆந்திராவில் கால்நடை பெண் மருத்துவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இச்சமூகம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழலையே பரிசாக அளிக்கிறது. அனைத்துத் துறையில் உள்ள பெண்களும் அதிகாரமிக்க ஆண்களால் ஆபத்தைச் சந்திக்கின்றனர். ஆண்களின் அதிகாரத் திமிரும், பெண்களுக்கு எதிரான மனநிலையும்தான் இந்த வன்முறைக்கான காரணங்கள்.

பெண்களைத் துன்புறுத்துவதற்கான முக்கியக் காரணம் அவர்கள் எதுவும் செய்ய இயலாதவர்கள், சக்தியற்றவர்கள், அவர்கள் மீதான கொடுமைகளுக்குத் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற ஆணாதிக்க மனோபாவமே.

இன்றைய சமூகத்தில் அவ்வளவு சீக்கிரம் எளியவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. இந்த வலியைச் சுமந்து, என்னைப் பாதித்த சம்பவங்களுடன் சேர்த்து பெண்களுக்கு நடக்கும் அவலத்தையும், அதிலிருந்து மீள்வது குறித்தும் அழுத்தமான திரைக்கதையைக் கட்டமைத்துள்ளேன். அந்த விதத்தில் 'டேனி' சில உண்மைகளை உரக்கப் பேசும். இது ஏன் ஆண் பூமியாக உள்ளது, பெண்கள் ஏன் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற எனது கேள்விகள் படம் பார்ப்பவர்களை நிச்சயம் உலுக்கும்.

வரலட்சுமி எப்படிப் பொருந்தினார்? ஆக்‌ஷன் நாயகிக்கான நல்வரவாக வரூவைப் பார்க்க முடியுமா?

கதாநாயகி, எதிர் நாயகி, குணச்சித்திரக் கதாபாத்திரம் என்று எல்லாம் பண்ணிவிட்டார். ஆனால், 'டேனி' படத்தில் வரலட்சுமி ரொம்பப் புதிதாகத் தெரிவார். பொறி பறக்கும் சண்டைக் காட்சிகள், போலீஸ் அதிகாரிக்கே உரிய ஆக்‌ஷன் சீக்வென்ஸ் படத்தில் இருக்காது. அவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பணிபுரியும் காவல் நிலையத்தில் சிக்கலான ஒரு குற்றத்தைப் புலனாய்வு செய்ய வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதை உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் எப்படிக் கையாள்கிறார் என்பதே அவர் கதாபாத்திரத்தின் நீட்சி. டேனி என்ற நாயின் உதவியுடன் ஏ1 என்று சொல்லப்படும் முதலாவது குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரலட்சுமியின் புத்திசாலித்தனமே டேனியின் ஒன்லைன்.

வரலட்சுமிக்கு மக்கள் செல்வி பட்டம் ஏன்? சமீபத்தில் அது பேசுபொருளாகி இருப்பதைக் கவனித்தீர்களா?

வரலட்சுமியின் கெரியரைப் பொறுத்தோ, இந்தப் படத்துக்காகவோ மட்டும் அந்தப் பட்டம் கொடுக்கப்படவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் அவர் மரியாதையுடன் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். மற்றவர்களின் பசி, துயரம், வலி என அத்தனையும் உணர்ந்து உதவுகிறார். ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த ஒருவர் தன் குடும்ப நிலையைக் கூறிக் குமுறினார். அவர் குழந்தையின் கல்விக் கட்டணத்துக்கு வரலட்சுமி உதவினார். யாரும் மிக எளிதாக அவரை அணுகி உதவி கேட்க முடியும். தனி மனுஷியாக பல்வேறு உதவிகளை, சேவைகளைச் செய்துகொண்டு மக்களோடு நெருக்கமாக இருக்கும் ஒருவருக்கு மக்கள் செல்வி பட்டத்தைக் கொடுப்பதுதானே சரி. வரலட்சுமி அந்தப் பட்டத்துக்கு 100 சதவீதம் பொருத்தமானவர்.

டேனி என்று டைட்டில் வைக்கக் காரணம் என்ன? நிஜமாகவே நாய்க்கு படத்தில் அவ்வளவு ஸ்கோப் இருக்கிறதா?

படம் பார்க்கும்போது இந்த டைட்டில் எந்த அளவுக்குச் சரியானது என்பதை நீங்களே உணர்வீர்கள். ஐந்தறிவு கொண்ட நாய்க்கு நுகர்வு சக்தி அதிகம். நாயைப் பொறுத்தவரையில் அது பொருள், பணத்தைத் தொடாது. லஞ்சம், ஊழலில் சிக்காது. குறிப்பாக, அநியாயத்துக்குத் துணை போவதோ, ஆதரவு தருவதோ இல்லை. மனித இனத்தின் மீது பெருங்கருணையும், பேரன்பும் கொண்டது. அந்த விதத்தில் 'டேனி' நிறைய விஷயங்களை பிரேக் செய்யும்.

'டேனி' என்றால் நீதி வழங்கும் கடவுள், நீதியின் பக்கம் நிற்கும் கடவுள் என்று பைபிளில் சொல்லப்படுகிறது. பாலியல் வன்கொடுமைகளைச் செய்யும் குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக என் படம் இருக்க வேண்டும் என்பதற்காகவே 'டேனி' என்று டைட்டில் வைத்தேன்.

மற்ற படங்களில் காட்டப்படுவதைப் போல 'டேனி' எனும் நாய் எந்த சாகசத்தையும் இப்படத்தில் செய்யாது. தடயம் தேடி ஓடும். மிகுந்த யதார்த்தத்துடன் துப்பு துலக்க உதவும். வரலட்சுமிக்குப் பேருதவிகள் செய்யும். ஆனால், துப்பறியும் விஷயங்களில் டேனியின் அசாத்திய திறமை உங்களை அசர வைக்கும்.

இப்பொதெல்லாம் இந்தி, தெலுங்கு மொழி மாற்று உரிமைக்காகவே யானை, நாய், குரங்கு என ஏதேனும் ஒரு விலங்கை நடிக்க வைப்பது வழக்கமாகி வருகிறதே?

உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது. 'டேனி' அதிலிருந்து விதிவிலக்கு என்றுதான் சொல்வேன். நான் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்தபோது என்னை ஒரு சம்பவம் திடுக்கிட வைத்தது. பணியில் இணைந்த முதல் நாள் எனக்கு ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. தான் ஆசையாய் வளர்த்த பொமேரியன் நாய் இறந்துபோனதால் துக்கம் தாளாமல், அதன் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டான். அதுகுறித்த செய்தியைச் சேகரித்த பிறகு நான் நாய்கள் குறித்து நுட்பமாக ஆய்வு செய்யத் தொடங்கினேன். அதுகுறித்துக் கவிதை எழுதினேன். நாய் குறித்த கவிதை, சிறுகதை என எதுவாக இருந்தாலும் தேடித்தேடிப் படித்தேன். நாயிடம் இருந்து எனக்குப் பிடித்தது விசுவாசமல்ல, நேர்மை. அதே நேர்மையை என் படத்திலும் செய்திருக்கிறேன்.

இயக்குநர் சந்தானமூர்த்தி.
இயக்குநர் சந்தானமூர்த்தி.

ஓடிடி தளத்தில் உங்கள் முதல் படம் ரிலீஸ். எப்படி உணர்கிறீர்கள்? சினிமா ரிசல்ட்டே இப்போது மாறியிருக்கிறதே? இது வரமா? சாபமா?

கரோனா வைரஸால் ஏற்பட்ட அச்சுறுத்தலும் அதனால் நடைமுறைப்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கும் கூட்டுச் சமூகத்தை, கூட்டு உழைப்பைத் துண்டாடியுள்ளது. சமூகம் என்பது நான்கு பேர் என்று சொல்வார்கள். வேலை, தொழில், கலை என எதுவாக இருந்தாலும் அதில் கூட்டு உழைப்பை, கூட்டு முயற்சியைப் பார்க்க முடியும். ஆனால், இந்தக் கரோனா வைரஸ் பாதிப்பு கூட்டுச் செயல்பாட்டைத் தகர்த்தெறிந்துள்ளது. சமூகத்தில் இருந்து விலகியிருக்கச் சொல்கிறது. ஒரு படைப்பாளியாக நினைத்துப் பார்க்கையில் இந்தத் தனிமை என்பது வருத்த வடுக்களையே ஏற்படுத்துகிறது. திருவிழா போல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடிப் பார்த்து மகிழ்ந்த திரையரங்குகள் இன்று வெறிச்சோடிக் கிடக்கின்றன.

ஆனாலும், இந்த நெருக்கடி இன்னொரு வடிவத்துக்கு நம்மைத் தயார்படுத்துகிறது. தெருக்கூத்து, நாடகம், சினிமா என்று கலையின் வடிவம் ஒவ்வொன்றும் அடுத்தகட்டப் பாய்ச்சலை நோக்கியே செல்கின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்ந்து நாமும் நம்மை அப்டேட் செய்துகொள்கிறோம். அந்தவகையில் திரைப்பட வெளியீடு இப்போது ஓடிடி தளங்களின் வழியே சாத்தியமாகியுள்ளதை நான் வரவேற்கிறேன். மாற்றங்களை எதிர்கொள்ளும் படைப்பாளியாக, என் படம் ஓடிடி தளத்தின் வழியே வெளியாவதைப் பெருமையாகவே கருதுகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in