

தைரியமாகப் பேசும் நபர்கள் திரைத்துறையில் இல்லை என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் 'டேனி'. திரையரங்குகள் திறக்கப்படாத சூழலில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் வரலட்சுமி சரத்குமாருடன் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஒரு நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
அந்தப் பேட்டியில் தமிழ்த் திரையுலகில் 'மீடூ அமைப்பு' குறித்த கேள்விக்கு வரலட்சுமி சரத்குமார் கூறியிருப்பதாவது:
"ஒட்டுமொத்த அமைப்பும் சீரழிந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாகத் தைரியமாகப் பேசும் நபர்கள் யாரும் திரைத்துறையில் இல்லை. ஒரு படத்தில் என்னோடு பணிபுரிய வேண்டிய ஒரு நபர் மீது இன்னொரு பெண் குற்றச்சாட்டு வைத்தபோது நான் தயாரிப்பாளரிடம் சென்று அவர் என் படத்தில் இருப்பதை நான் விரும்பவில்லை என்று கூறினேன். அந்தத் தேர்வை நானே உருவாக்கினேன். அதுதான் நம்முடைய தனிப்பட்ட பொறுப்பு. அப்படித் துணிந்து செய்ய யாராவது தயாராக இருக்கிறார்களா என்பதே என்னுடைய கேள்வி".
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.