

வீரப்பன் வெப் சீரிஸ் தொடர்பாக 'ஆதித்ய வர்மா' தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக இயக்குநர் ஏ.எம்.ஆர் ரமேஷ் அறிவித்தார். 10 எபிசோட்களாக உருவாகும் இந்த வெப் சீரிஸில் நடிகர் கிஷோர், வீரப்பனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள வெப் சீரிஸில் சுனில் ஷெட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது, வீரப்பனைப் பற்றிய முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐபிஎஸ் எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக 'ஆதித்ய வர்மா' படத்தைத் தயாரித்த ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐபிஎஸ் எழுதிய புத்தகத்தை வைத்து வெப் சீரிஸ் மட்டுமன்றி ஓடிடி தளங்களுக்கான படைப்புகளை உருவாக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. அனைத்துமே ‘சேஸிங் தி பிரிகண்ட் ’ (Chasing the Brigand) என்ற தலைப்பில் முன்னாள் ஏஜிடிபி விஜயகுமார் ஐபிஎஸ் எழுதிய புத்தகத்தை வைத்து இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதனை ஓடிடி தளத்துக்கு அனுமதி அளித்திருப்பதற்கு விஜயகுமாருக்கு நன்றி தெரிவித்துள்ளது ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம். இந்தப் படைப்புகளில் பணியாற்றும் நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் பற்றிய விவரங்கள், ஊரடங்கு முடிந்ததும் வெளியிடப்படும் எனத் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.
மேலும், புத்தகத்தில் கூறியுள்ள அனைத்துத் தகவல்களுமே காப்புரிமையின் கீழ் வருகிறது. அதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் முகேஷ் மேத்தா.
ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக அனுமதி பெற்றிருப்பதால், ஏ.எம்.ஆர் ரமேஷ் இயக்கவுள்ள வெப் சீரிஸுக்குச் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.