Published : 28 Jul 2020 12:03 pm

Updated : 28 Jul 2020 12:03 pm

 

Published : 28 Jul 2020 12:03 PM
Last Updated : 28 Jul 2020 12:03 PM

தனுஷ் பிறந்த நாள் கட்டுரை: அசுரத்தனமான நடிகரா தனுஷ்?

dhanush-birthday-special

தனுஷ் என்னும் சாதாரண இளைஞனை நாயகனாகக் கொண்டு 2002 மே மாதம் ‘துள்ளுவதோ இளமை’ என்னும் திரைப்படம் வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தை தனுஷின் தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். தனுஷின் அண்ணனான செல்வராகவன் திரைக்கதையை எழுதியிருந்தார். ஒரு குடும்பமாக உருவாக்கப்பட்ட இந்தப் படம் இளைஞர்களின் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் அம்சத்தைப் பிரதானமாகக் கொண்டிருந்தது. இந்தப் படம் வெளிவந்தபோது, இது ஓர் ஆபாசப் படம் என்பதான பிம்பமே பொதுவெளியில் உலவிவந்தது. அது முழுக்க முழுக்க மறுக்கக்கூடிய ஒன்றுமல்ல. ஏனெனில், படம் உருவாக்கப்பட்ட தன்மை அந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தக்கூடியதாக இருந்தது. மேலும், இப்படியான போக்கும் தமிழ்த் திரையில் புதிதல்ல. நடிகர் விஜய் தொடக்க காலத்தில் கதாநாயகனாக நடித்த ‘ரசிகன்’ இதே தன்மையிலானது. ’துள்ளுவதோ இளமை’ அளவுக்கு ’ரசிக’னில் இளமைத் துள்ளல் இல்லாவிட்டாலும் அதிலும் பாலியல் கிளர்ச்சி என்னும் அம்சம் இருக்கவே செய்தது.

ஆனால், அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ என்னும் படத்தில்தான் தனுஷை ஒரு நடிகராகக் கருத முடிந்தது. அந்தப் படத்தில் வினோத் என்னும் கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை அவர் செய்திருந்தார். தாழ்வுணர்வு, காதல், காமம், மனரீதியான பாதிப்பு போன்றவற்றை உள்ளடக்கியிருந்த கதாபாத்திரத்தை இருபது வயதுலேயே வெற்றிகரமாகச் சமாளித்திருந்தார். அந்தப் படத்தின் வெற்றி தனுஷ் என்னும் நடிகனுக்குப் பெரிய கவனத்தைக் கொடுத்திருந்தது.

அதே ஆண்டில் வெளியான ’திருடா திருடி’ குறைந்த செலவில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியைக் கொடுத்தது. அதிலும் மன்மத ராசா… பாடலுக்குக் கிடைத்த வெற்றி ஒருவித அச்ச உணர்வையே பொதுவான பார்வையாளர்களிடம் உருவாக்கியது. இத்தகைய பாடல்களின் பெரிய வெற்றி எங்கே போய் நிற்குமோ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால், ஒரு நடிகராக தனுஷுக்கு அது பெரிய உற்சாகத்தைத் தந்திருக்க வேண்டும். மன்மத ராசா என்னும் அந்த இரட்டைச் சொற்கள் ரசிகர்களிடமும் கிளுகிளுப்பை உருவாக்கியிருந்தன. அடுத்து, ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ வந்தது. பின்னர், ’சுள்ளான்’ வெளியானது. ’சுள்ளான்’ பலத்த கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான படமாக இருந்தது. தனுஷ் என்னும் சாதாரண நடிகர் மீது சுமத்தியிருந்த கதாநாயக பிம்பம் அவரைப் போட்டு அமுக்கியிருந்தது.

அடுத்து, கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த ’ட்ரீம்ஸ்’ தனுஷுக்கு விமர்சனரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பலத்த அடியானது. மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தனுஷ் வந்தார். அந்தச் சூழலில் வெளியான பூபதி பாண்டியனின் ’தேவதையைக் கண்டேன்’ சுமாரான வெற்றியைப் பெற்றது. தனுஷ் மூச்சுவிட்டுக்கொள்ளும்படியான வெற்றி கிடைத்தது. ஆனால், ஒரு நடிகராக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய தேவை தனுஷுக்கு இருந்தது. அது பாலுமகேந்திரா போன்ற இயக்குநராலேயே சாத்தியப்படாத சூழலில் மீண்டும் தனுஷ் செல்வராகவனை நோக்கித் திரும்ப வேண்டியதிருந்தது. ஏனெனில் பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அது ஒரு கனாக் காலம்’ சட்டென்று கலைந்த மேகமாக வந்துபோனது.

இப்படி தனுஷ் தள்ளாடிக்கொண்டிருந்த காலத்தில் வெளியானது செல்வராகவனின் ’புதுப்பேட்டை’. அந்தப் படம்தான் தனுஷ் என்னும் நடிகரைத் துணிந்து நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்ற நம்பிக்கையைப் பிற இயக்குநர்களுக்குத் தந்திருக்க வேண்டும். பென்சில் போன்ற உடம்புக்குள் பேராலமரம் போன்ற நடிப்பு ஒளிந்திருக்கிறதோ என்னும் எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டிருந்தது ’புதுப்பேட்டை’. கிடுக்குப் பிடி போன்ற கொக்கி குமாரின் நடிப்பில் ரசிகர்கள் கட்டுண்டு கிடந்தனர். விமர்சகர்கள் பாராட்டைப் பெற்ற ’புதுப்பேட்டை’யைத் தொடர்ந்து வெளியான ’திருவிளையாடல் ஆரம்பம்’ வணிகரீதியாக அவருக்குப் பெரிய வெற்றியைத் தந்தது. இவ்வளவுக்கும் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து பெரிய வெற்றியைச் சம்பாதித்திராத ’மிஸ்டர் பாரத்’ என்னும் படத்தின் கதையைப் பூசி மெழுகி உருவாக்கப்பட்டிருந்த படம்தான் இது. ஆனால், திருக்குமரன் என்னும் அந்தக் கதாபாத்திரத்தில் தனுஷ் ரசிகர்களைத் தன்வயப்படுத்தியிருந்தார். ஒரு பொழுதுபோக்குப் படத்தில் எந்த அளவுக்கு ரசிகர்களை உற்சாகப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தார். பார்க்கப் பார்க்க தனுஷை எல்லோருக்கும் பிடித்துவிடுமோ என்னும் எண்ணத்தை உருவாக்கியிருந்தது இந்தப் படம்.

தனுஷின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்த சம்பவம் எனில் அவர் வெற்றிமாறனுடன் கைகோத்ததுதான். ஏனெனில், தொடக்க காலத்தில் செல்வராகவன் படங்களில் மட்டுமே தனுஷால் நல்ல நடிப்பை வெளிப்படுத்த முடியுமோ என்ற எண்ணம் ரசிகர்கள் மனத்தில் பரவியிருந்தது. இவ்வளவுக்கும் அண்ணன் இயக்கத்தில் அவர் அப்படி நடித்திருந்தது இரண்டே படங்கள்தான். ஏனோ அப்படி ஒரு பிம்பம் ஏற்பட்டிருந்தது. இந்தப் பிம்பத்தை அழித்து தனுஷுக்கு ஒரு பிரமாதமான நடிகன் என்ற பிம்பத்தை அளித்ததில் வெற்றிமாறனுக்கு முக்கிய இடமுண்டு. இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் படம் ’பொல்லாதவன்’. ரஜினிக்கு மருமகனான பின்னர் மாமனார் நடித்த படமொன்றின் பெயரில் தானும் நடித்தார். ’பீஜிங் பைசைக்கிள்’, ’பைசைக்கிள் தீவ்ஸ்’ போன்ற படங்களில் தாக்கத்தில் உருவானதோ என்னும் எண்ணத்தைத் தோற்றுவித்த ’பொல்லாதவன்’ தனுஷ் கெரியரில் மறக்க முடியாதவன்.

வெற்றிகரமான நாயகனாகத் தன்னை நிறுவிக்கொண்ட தனுஷ் அடுத்து, ’யாரடி நீ மோகினி’, ’படிக்காதவன்’, ’குட்டி’, ’உத்தமபுத்திரன்’ என்று வலம் வந்தார். தொடந்த வெற்றிகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பத்தில் இப்போது வழக்கம்போல் செல்வராகவனிடம் செல்லாமல் வெற்றிமாறனிடம் சென்றார். அப்போது உருவானது ’ஆடுகளம்’. தனுஷுக்கான களமாக ஆனது அது. நின்று நிதானமாக ஆடி ரசிகர்களிடம்தான் ஒரு பெரிய நடிகன் என்று நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அவருக்கு இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காகத் தேசிய விருதும் கிடைத்தது.

அடுத்து வழக்கம்போல் ’சீடன்’, ’மாப்பிள்ளை’, ’வேங்கை’ எனச் சில படங்களில் நடித்தார். ஒரு நடிகன் தன்னை நடிகனாக நிரூபிக்க வேண்டுமென்றால் அவர் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து, தான் எந்த வேடத்திலும் நடிக்கக்கூடியவன் என்பதை நிரூபித்தாக வேண்டும். ஒரே மாதிரியான வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அந்த நடிகனுக்கே அலுப்புத் தட்டிவிடும். அப்படித் தனக்கும் ரசிகருக்கும் அலுப்புத் தட்டாமல் பார்த்துக்கொள்பவனே வெற்றிகரமான நடிகனாக நீண்ட நாட்கள் திரையுலகில் நீடித்து நிற்க முடியும். இப்போது அப்படி ஒரு மாறுபட்ட படத்துக்காக மீண்டும் அண்ணன் செல்வராகவனிடம் சென்ற தனுஷுக்குக் கிடைத்தது ’மயக்கம் என்ன’. சொல்லிக்கொள்ளும் படமாக அது இருந்தபோதிலும் செல்வராகவன் தனுஷ் கூட்டணியின் வழக்கமான உயரத்தைத் தொடாத படமென்றே அதைச் சொல்ல வேண்டும்.

அடுத்து வெளியானது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ’3’. இந்தப் படத்தில் தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலை பயங்கரமான ஹிட் ஆக்கினார்கள். அனிருத் எனும் புது இசையமைப்பாளர் தனுஷுடன் கைகோத்த படமிது. நடிகர் சிவகார்த்திகேயனும் இந்தப் படத்தில் நடித்திருந்தார். அடுத்து, ’நையாண்டி’, ’மரியான்’, ’வேலையில்லா பட்டதாரி’, ’அனேகன்’, ’மாரி’, ’தங்கமகன்’, ’தொடரி’, ’கொடி’ என்று பயணப்பட்டார். இடையில் இந்தியில் நடித்தார், ’ராஞ்சனா’, ’ஷமிதாப்’. தனுஷ் என்னும் நடிகருக்குப் போதுமான திருப்தி கிடைத்துவிட்டதோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும்படியாக வழக்கமான படங்களிலேயே நடித்துக்கொண்டிருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் ’வடசென்னை’யும் ’அசுர’னும் வெளியாயின. தனுஷ் என்னும் நடிகர் மாறுபட்ட படங்களைத் தருவார் என்னும் நம்பிக்கையை இந்தப் படங்கள் ஏற்படுத்தியிருப்பதுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘கர்ணன்’ அந்த நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. தனுஷ் வாழ்வின் பொன்னான படம் இனிதான் வரப்போகிறதோ என்னவோ?

தவறவிடாதீர்!


அசுரத்தனமான நடிகரா தனுஷ்தனுஷ் பிறந்தநாள்நடிகர் தனுஷ்Dhanush birthday specialActor dhanushDhanush fansTamil cinemaதுள்ளுவதோ இளமைகாதல் கொண்டேன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author