

இந்தி திரையுலகினருக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் 'தில் பெச்சாரா' இசையே சரியான பதில் என்று பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாரிசு அரசியல் தொடர்பாக அனைத்துத் திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான கடைசிப் படமான 'தில் பெச்சாரா', ஜூலை 24-ம் தேதி ஓடிடி தளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
'தில் பெச்சாரா' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், "நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால், என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்" என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சும் அதோடு இணைந்தது. இது தொடர்பாக பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ரஹ்மானின் வார்த்தைகள் பற்றி பேச அவர்களின் விவாதத்திற்கு ஒரு தேசிய தொலைக்காட்சி என்னை அழைத்தது. எந்தக் கூட்டத்துக்கும் 'தில் பெச்சாரா'வின் இசையே சரியான பதில் என்று கூறி அவர்கள் அழைப்பைத் தன்மையாக மறுத்து விட்டேன். இந்தி திரை இசையில் சில காலமாக என்ன இல்லை என்பதை 'தில் பெச்சாரா' பாடல்களைக் கேட்கும்போது இசை பிரியர்கள் உணர்ந்து கொள்ளலாம்"
இவ்வாறு பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.