

விஜய் தொலைக்காட்சியின் 'ராஜா ராணி' தொடருக்குப் பிறகு சிறு இடைவெளி எடுத்துக்கொண்ட ஆல்யா மானஷா, புதிய சீரியலில் நடிக்கத் தயாராகி வருகிறார். செப்டம்பரில் அதன் வேலைகள் தொடங்கப்பட உள்ளன.
'ராஜா ராணி' சீரியல் வழியே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்த ஆல்யா மானஷாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இதனால் சீரியல் நடிப்பு, ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பக்கம் பெரிதாக கவனம் செலுத்தாமல் குழந்தை அய்லாவுடன் நேரம் செலவிடுவதில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் புதிய சீரியலில் நடிக்க, ஆல்யா தயாராகியுள்ளார். இந்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த சீரியலுக்காக டெஸ்ட் ஃபோட்டோ ஷூட் நிறைவடைந்துள்ளது. திரைக்கதையை இறுதி செய்யும் வேலைகளில் தயாரிப்புக் குழு இறங்கியுள்ளது. இந்தத் தொடருக்கு ஆல்யாதான் நாயகியாக சரியாக இருப்பார் எனவும் அக்குழு முடிவு செய்துள்ளது.
அனைத்து வேலைகளும் நிறைவுபெற்று, வரும் செப்டம்பரில் சீரியலுக்கான வேலைகள் முழு வேகத்துடன் தொடங்க உள்ளன. 'ராஜா ராணி' சீரியல் போல அடுத்து தனக்கு பெரும் பிரேக் கொடுக்கும் சீரியலாக இது அமையும் என சந்தோஷத்தைப் பகிர்ந்துள்ளார், மானஷா.
இந்தத் தொடரை 'கனா காணும் காலங்கள்' , 'சரவணன் மீனாட்சி', 'ராஜா ராணி' ஆகிய தொடர்களை இயக்கிய பிரவீன் பெர்னட் இயக்க உள்ளார்.