Last Updated : 25 Jul, 2020 11:54 AM

 

Published : 25 Jul 2020 11:54 AM
Last Updated : 25 Jul 2020 11:54 AM

இயக்குநர் மகேந்திரன்: தமிழ்த் திரையின் உதிராப்பூ  

இயக்குநர் மகேந்திரனின் 81-ம் பிறந்த நாள் இன்று!

தமிழ்த் திரைப்படங்களில் எத்தனையோ இயக்குநர்கள் பணியாற்றியுள்ளபோதும் திரைப்பட வரலாற்றில் சிலரது பெயர்கள் தனிப்பட்ட பிரியத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படிப்படியான பிரியத்தைச் சம்பாதித்தவர்களில் ஜே.மகேந்திரனும் ஒருவர்.

அதிகமான படங்களை அவர் இயக்காவிட்டாலும் அழுத்தமான சில படங்களைத் தனது பெயர் சொல்வதற்கு விட்டுச் சென்றுள்ளார். மொத்தமே அவர் இயக்கிய படங்கள் பன்னிரண்டுதாம். அவை, ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘பூட்டாத பூட்டுக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சைத்தைக் கிள்ளாதே’, ‘நண்டு’, ‘மெட்டி’, ‘அழகிய கண்ணே’, ‘கை கொடுக்கும் கை’, ‘கண்ணுக்கு மை எழுது’, ‘ஊர்ப் பஞ்சாயத்து’, ‘சாசனம்’. அவர், 26 படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். 14 படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். 27 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். பத்துப் படங்களில் நடித்துள்ளார்.

மகேந்திரன் இயக்கிய படங்களில் அவருக்குப் பெரிய அளவில் பெயர் பெற்றுக்கொடுத்தவை என்று பார்த்தால், ’முள்ளும் மலரும்’, ’உதிரிப்பூக்கள்’, ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ’நண்டு’, ’மெட்டி’ ஆகியவையே. விதிவிலக்காக அவர் உருவாக்கியதொரு படம் ’பூட்டாத பூட்டுக்கள்’. ரஜினிகாந்த் நாயகனாக நடித்த மூன்று படங்களை மகேந்திரன் இயக்கியிருந்தார். அதில், ஒன்று மகேந்திரனின் பெயர் சொல்லும், அது ’முள்ளும் மலரும்’. அந்தப் படத்தில் அவர் உருவாக்கியிருந்த தன்மானமுள்ள இளைஞனான காளிக்கு நிகராக இன்னும் ஒரு கதாபாத்திரமும் தமிழ்த் திரையில் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ரஜினிகாந்த், சிவாஜியைப் போன்று திரையில் கம்பீரமான ஆகிருதியை வெளிப்படுத்தும் திறன் பெற்றவரில்லை. என்றபோதும், காளி கதாபாத்திரம் ஆஜானுபாகுவாகத் திரையில் நின்றதற்குக் காரணம் இயக்குநர் மகேந்திரன். ’கெட்ட பய சார் இந்தக் காளி’ என்னும் வசனம் தமிழ்த் திரையுலகில் உலைப் பிழம்பாக ஜொலித்துக்கொண்டே இருக்கும். அது வெறும் வசனமல்ல, தன்மானமுள்ள ஒரு கிராமத்து இளைஞனின் உள்ளக் கொதிப்பின் வெளிப்பாடு.

அடுத்ததாக அவர் உருவாக்கிய ‘ஜானி’யில் மகேந்திரனைவிட அதிகப் பெயரைத் தட்டிச் சென்றவர்கள் இளையராஜாவும் ஸ்ரீதேவியும்தான். ’ஜானி’யைப் பொறுத்தவரை, அவர் அதை ஒரு மாறுபட்ட பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாக்கியிருந்தார். அதில் பிற இயக்குநர்களுக்குக் கைவராத ஒரு வித்தியாசமான உணர்வு வண்ணத்தைக் குழைத்துப் படம் நெடுகிலும் பூசியிருப்பார். ரஜினிக்கும் அவருடைய தந்தைக்குமான உறவில் அந்த வண்ணத்தை நாம் கண் குளிரக் காணலாம். அந்த வண்ணம்தான் ’ஜானி’ திரைப்படத்தின் வசீகரம்.

மகேந்திரனைத் தவிர்த்து பிற இயக்குநர்கள் கையாண்டிருந்தால் சாதாரணப் பொழுதுபோக்குப் படமாக மாறியிருக்கும் ’ஜானி’. ரஜினியிடம் ஸ்ரீதேவி காதலைச் சொல்லும் காட்சியில் தென்படும் ரசனையே அவரது தனித்துவம். ’காற்றில் எந்தன் கீதம்’ பாடலும் அதை அவர் படமாக்கியிருந்த விதமும், ஓர் இயக்குநரிடம் வெளிப்பட வேண்டிய கிரியேட்டிவிட்டியை உணர்த்துபவை. அந்தப் பாடலை மகேந்திரன் பெருங்கூட்டம், பெரு மழை, ஒரு மேடை, ஒரு பாடகி, அவளுடைய ரசிகன் இவற்றுக்கிடையே ஒரு பாடல் என்று கற்பனை செய்திருந்திருக்கிறார். ஆனால், படத்தின் பட்ஜெட் அதற்கு இடம்கொடுக்காத சூழலில், யாருமே இல்லாத மேடைக் கச்சேரி மழையும் புயலும் மட்டுமே உண்டு. என்றபோதும், காலத்தால் அழியாப் பாடல் காட்சியாக அதைப் படைத்துவிட்டார். அங்குதான் இயக்குநராக மகேந்திரன் நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறார்.

இறுதியாக ரஜினியை இயக்கிய ’கை கொடுக்கும் கை’ திரைப்படத்தை திருநெல்வேலி சிவசக்தி தியேட்டரில் குடும்பத்துடன் பார்த்திருக்கிறேன். ஆனால், அது குடும்பத்துடன் காண வேண்டிய சித்திரமல்ல. சின்னி ஜெயந்த் தொடர்பான காட்சிகள் மகேந்திரனின் திரைப்பட வரலாற்றில் பட்டிருக்கக்கூடாத கறைகள். ‘ஆத்தா பெத்தாளே ஆம்பிளயா என்னத்தான்…’ பாடல் தெறிக்க விடக்கூடியது என்றாலும் அது மகேந்திரனுக்கானதல்ல. ’ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…’ பாடல் போன்ற ரௌத்திரம் வெளிப்படாமல் வெறும் பெருமிதப்பாடலாக ’ஆத்தா பெத்தாளே…’ சுருங்கிவிட்டது. ’முள்ளும் மலரும்’, ’ஜானி’ ஆகிய படங்களில் நாயகன் இயக்குநரின் கட்டுக்குள் கிடந்தான். ஆனால், ’கை கொடுக்கும் கை’ படத்தில் அந்த அம்சம் காணாமல் போய்விட்டது. சராசரியான ஒரு படமாக அது மாறிவிட அதுகூடக் காரணமாக இருக்கலாம்.

மகேந்திரனின் தனித்துவமான அம்சம் என்றால் அவரது கதாபாத்திர உருவாக்கத்தைச் சொல்லலாம். புதுமைப்பித்தனின் சிற்றன்னையில் இருந்து சுந்தரவடிவேலு என்னும் பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு அதை ‘உதிரிப்பூக்க’ளில் அவர் மாற்றியிருந்த விதம், அமைதியான மனிதனுக்குள் அவ்வப்போது தலைதூக்கும் கட்டுவிரியன் மனசை அவர் திரையில் காட்டியிருந்த தன்மை வெள்ளித்திரைக்குப் புதுசு. அப்படியொரு படம் வெள்ளிவிழா கண்டது தமிழ்த் திரையுலகின் பேரதிசயம். ஆணுக்கு ’உதிரிப்பூக்க’ளில் விஜயன் ஏற்றிருந்த சுந்தரவடிவேலு போல் பெண்ணுக்கு ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் சாந்தி வில்லியம்ஸ் நடித்திருந்த மாலா என்னும் அண்ணி கதாபாத்திரம்.

எல்லோரும் வேலைதேடி வட மாநிலம் செல்வதாகத் தமிழ்ப் படமெடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் மகேந்திரனின் ‘நண்டு பட நாயகன் ராம் குமார் ஷர்மா உத்தரப் பிரதேசத்திலிருந்து சென்னை வந்திருப்பான். அவனுக்கு வாழ்க்கை சென்னை தந்திருக்கும். ’நண்டு’ படத்தில் வடமாநிலத் தந்தை தன் ஆணாதிக்கத்தால் நாயகனின் வெறுப்பைச் சம்பாதித்திருப்பார். மகேந்திரனின் ’மெட்டி’யிலோ குடிகாரரான தென்மாநிலத் தந்தை சண்முகத்தின் நடத்தை பிடிக்காமல் பட்டாபி வீட்டை விட்டு வெளியேறியிருப்பான். இரண்டு படங்களின் கதையையும் மகேந்திரன் எழுதியிருந்தார். தந்தைகளின் கட்டுப்பாடும் மேலாதிக்கமும் குடும்பங்களின் நிம்மதியைக் குலைக்கின்றன என்பதாகவே இந்தப் படங்கள் சேதி சொல்கின்றன. இந்தியக் குடும்பங்களில் இத்தகைய போக்கு மிகச் சாதாரணமானது. இதை மகேந்திரன் தனக்கே உரித்தான தீவிர மொழியில் வெளிப்படுத்தியிருந்தார். தீவிர இலக்கியத்துக்கான ஒரு மொழியில் அவர் திரைப்படங்களைக் கையாள விரும்பியிருக்கிறார். அதற்கு அவருடைய ஒளிப்பதிவாளர்களான பாலுமகேந்திரா, அசோக் குமார் ஆகியோரும் முழு ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர்.

ஆணாதிக்கக் குடும்பத்தில் பெண்களின் பாடுகளை அவர் சொல்லியிருக்கிறார். ஆண்களின் ஆதிக்கப்போக்கு குடும்பங்களில் ஏற்படுத்திய சேதாரத்தை அவர் அங்குலம் அங்குலமாக எடுத்துவைத்திருக்கிறார். அதற்கு எதிராக அவரது படைப்பு மனம் வீறு கொண்டு எழுந்திருக்கிறது. திருமணம், குடும்பம், அது தொடர்பான சம்பிரதாயச் சடங்குகள் போன்றவை தனி மனிதர் விருப்பங்களிலும் வாழ்விலும் குறுக்கீடுசெய்வதால் உருவாகும் இடைஞ்சல்கள் அவரைத் தொந்தரவு செய்திருக்கின்றன என்பதை அவரது படங்கள் குறிப்புணர்த்துகின்றன. அப்படியே அரிய ஊற்றாகத் தோன்றி பெருநதியாக மாறி, இறுதியில் சிறு ஓடையாகக் கடலில் கரைந்துபோன படைப்பாளியாகத் திரையுலகம் அவரைக் குறித்துவைத்திருக்கிறது. மகேந்திரனின் ஆகிருதி வெளிப்பட்ட அந்த நதிக் காலத்தில் உருவான படங்கள் ரசிகர்கள் மனத்தில் மென்மையான அலைகளை உருவாக்கிவிட்டபடியே இருக்கும். அதில் கால்களை நனைத்துக்கொண்டு ரசிகர்கள் மகேந்திரனைக் காலகாலத்துக்கும் நினைத்தபடியே மகிழ்ந்திருப்பார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x