

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் 'ரெட்டை ரோஜா' சீரியலில் அனு, அபி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஷிவானிக்குப் பதில் சாந்தினி நடிக்கிறார். இவர், 'சித்து ப்ளஸ் 2' படத்தில் அறிமுகமாகி 'கவண்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரண்டு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கிறார். சாந்தினி நடிக்கும் புதிய அத்தியாயங்கள் ஆகஸ்டு 2-வது வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளன.
இது தொடர்பாக சேனல் வட்டாரத்தில் விசாரித்தபோது கூறியதாவது:
''கரோனா பாதிப்புக்குப் பிறகு சின்னத்திரை சிரீயல், ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் நடிகர், நடிகைகளில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் ஷிவானியால் இந்த சீரியலில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. மேலும், அவர் வேறு புதிய ப்ராஜக்ட் நோக்கிப் பயணிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் 'ரெட்டை ரோஜா' சீரியலில் ஏற்று நடித்த 'அனு', 'அபி' தொடரின் அத்தியாயங்கள் 15 நாட்கள் ஒளிபரப்பாகும். அதன்பிறகு சாந்தினி நடிப்பில் சீரியல் தொடர உள்ளது. மற்றபடி கதைக்களம், திரைக்கதை அதே திசையில் பயணிக்கும்.
ஷிவானி கதாபாத்திரத்தைப் போல சாந்தினி கதாபாத்திரமும் பார்வையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும். அனுவாகவும், அபியாகவும் சீரியல் ஷூட்டிங்கில் சாந்தினி அசத்தி வருகிறார். விரைவில் அது பார்வையாளர்களுக்குத் தெரியவரும்!''.
இவ்வாறு சேனல் வட்டாரத்தில் தெரிவித்தார்கள்.