

'வாலி' மற்றும் 'வரலாறு' படத்தின் இந்தி ரீமேக்குகளை ராகுல் கைப்பற்றியுள்ளார்.
அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களைப் பட்டியலிட்டால் அதில் 'வாலி' மற்றும் 'வரலாறு' படங்கள் கண்டிப்பாக இடம்பெறும். இந்தப் படங்களின் இந்தி ரீமேக் உரிமைகள் விற்கப்படாமலேயே இருந்தன.
தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார் அஜித். அவருடைய நடிப்பில் வெளியான 'விவேகம்', 'விஸ்வாசம்' படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்று வெளியிட்டவர் ராகுல்.
தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' பட வியாபாரப் பிரிவின் தலைமைப் பொறுப்பிலும் இருந்து வருகிறார். 'ரோமியோ பிக்சர்ஸ்' என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்புப் பணிகளையும் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், அஜித் மீது கொண்ட அன்பாலும், 'வாலி', 'வரலாறு' ஆகிய படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தாலும் அப்படத்தின் இந்தி மொழி ஆக்கம் உரிமையைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. தற்போது இந்தியில் அப்படங்களில் நடிப்பதற்கான நடிகர், நடிகைகள் தேர்வும் நடந்து வருகின்றன. இப்படங்களை தனது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வழியே இந்தியில் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் ராகுல்.