சூர்யா பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைவருக்கும் இவரைப் பிடிக்கும்

சூர்யா பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைவருக்கும் இவரைப் பிடிக்கும்
Updated on
6 min read

தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள். இனியும் பெறுவார்கள். ஆனால் நட்சத்திர நடிகர்களில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே நட்சத்திர அந்தஸ்துக்கான வெகுஜன ரசிகர் படையைத் தக்கவைத்துக்கொண்டே தரமான சோதனை முயற்சிப் படங்களிலும் நடிப்பார்கள். அதுபோன்ற படங்கள் மீதான வெகுஜன ரசனையை மேம்படுத்துபவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அரிதான நட்சத்திர நடிகர்களில் ஒருவரான சூர்யா இன்று (ஜூலை 23) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருடைய மாபெரும் ரசிகர் படையும் பொதுவான சினிமா ரசிகர்களும் தரமான திரைப்படங்களில் அக்கறைகொண்ட அனைவரும் அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்வதன் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்திவருகிறார்கள்.

போராட்ட ஆண்டுகள்

தமிழ் சினிமாவில் கறுப்பு வெள்ளைக் காலத்தில் அறிமுகமாகி கதாநாயகனாகவும் பின்பு குணச்சித்திர நடிகராகவும் அதைத் தாண்டி தனிமனித ஒழுக்கத்தின் அடையாளமாகவும் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சரவணன், 1997-ல் மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கிய 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் நமக்கு சூர்யாவாக அறிமுகமானார். அந்தப் படத்தில் விஜய்யுடன் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார் சூர்யா. படம் ஓரளவு கவனத்தை ஈர்த்தது என்றாலும் சூர்யாவின் நடிப்பும் நடனமும் விமர்சிக்கப்பட்டன. 'பெரியண்ணா' படத்தில் விஜயகாந்துடன் நடித்தார். மீண்டும் வசந்த் இயக்கத்தில் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் நடித்தார். சூர்யாவின் காதல் மனைவியான ஜோதிகா நாயகியாக நடித்த முதல் படம். 2001-ல் வெளியான 'ப்ரண்ட்ஸ்' படத்தில் மீண்டும் விஜய்யுடன் நடித்தார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றாலும் அது சூர்யாவின் வெற்றியாகப் பார்க்கப்படவில்லை.

மாற்றம் தந்த கோபக்கார இளைஞன்

'சேது' படத்தின் மூலம் அறிமுகமாகி அதுவரை பல ஆண்டுகளாகப் போராடிவந்த விக்ரமின் திரை வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குநர் பாலா சூர்யாவுக்கும் அதைச் செய்தார். ஆம் அவர் இயக்கிய இரண்டாம் படமான 'நந்தா' சூர்யா மீது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதுவரை கட்டை மீசை. படிய வாரிய தலை என ஒரே கெட்டப்பில் அமைதியான இளைஞனாகவோ அழகான காதலனாகவோ நடித்துவந்த சூர்யா முதல் முறையாக திருத்தப்படாத தாடி-மீசை, மழுங்க வெட்டிய தலைமுடி, கண்களில் வித்தியாசமான லென்ஸ் என கெட்டப்பிலேயே ஒரு ஆக்‌ஷன் நாயகனாக உருமாறினார். அதிகம் பேசாமல் அநீதி இழைப்பவர்களை அடித்துத் துவைத்துவிடும் கோபக்கார இளைஞனாக இந்தப் படத்தில் சூர்யா நடித்திருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது. அமிதாப் பச்சன் தொடங்கி பலருக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்த 'கோபக்கார இளைஞன்' என்னும் கதாபாத்திர வார்ப்பு சூர்யாவுக்கும் ரசிகர்கள் மனங்களில் அழுத்தமான தடம் பதிப்பதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

கோபமும் காதலும்

அடுத்த ஆண்டில் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அமீர் இயக்கத்தில் 'மெளனம் பேசியதே' படத்திலும் கோபக்கார இளைஞனாக நடித்திருந்தார் சூர்யா. ஆனால் அது ஒரு காதல் படம்! ஆம் ஒரு கோபக்கார இளைஞன் காதலை வெறுத்துப் பின் காதலில் விழுந்து தவறான புரிதலால் ஏற்பட்ட வலியைக் கடந்து பிறகு மீண்டும் தன் உண்மையான காதலைக் கண்டடையும் கதை. இந்தப் படத்தில் சூர்யா, கோபக்காரராக மட்டுமல்லாமல் நக்கல் பிடித்த இளைஞராக நகைச்சுவையிலும் காதல் காட்சிகளில் மருகுபவராகவும் சிறப்பாக நடித்திருந்தார். பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் சூர்யாவின் திரைவாழ்வில் முக்கிய இடம்பெறத்தக்கப் படம் இது.

போலீஸும் போக்கிரியும்

2003 சூர்யாவின் திரை வாழ்வில் மிக முக்கியமான ஆண்டு. அவரை நட்சத்திரமாக உயர்த்திய ஆண்டு என்றுகூடச் சொல்லலாம். இந்த ஆண்டு வெளியான 'காக்க காக்க' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் சூர்யா. கெளதம் மேனன் இயக்கிய இந்தப் படம் காவல்துறை அதிகாரிகளின் வீரத்துக்கும் தியாகத்துக்குமான உண்மையான மரியாதையாக அமைந்திருந்தது. கட்டுக்கோப்பான உடலமைப்பு. கூர்மையான பார்வை, துணிச்சலை வெளிப்படுத்தும் உடல்மொழி எனக் கதாபாத்திரத்துக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தினார் சூர்யா. நடிகர்கள் தீவிர உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பான உடலைப் பேண வேண்டும் என்ற ட்ரெண்டைத் தொடங்கிவைத்ததே இந்தப் படம்தான். இந்தப் படத்தில் சூர்யா-ஜோதிகா இடையிலான காதல் காட்சிகளும் மறக்க முடியாதவை. படம் மிகப் பெரிய வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது.

இதே ஆண்டில் இதற்கு நேரதிராக அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் போக்கிரியாக பாலா இயக்கிய 'பிதாமகன்' படத்தில் நடித்திருந்தார் சூர்யா. அமைதியானவர், இறுக்கமானவர் என்று கருதப்பட்ட நிலையில் படம் முழுக்க லொட லொட என்று பேசிக்கொண்டே இருப்பவராக நடித்து உருமாற்றத்துக்கு உட்படுத்திக்கொண்டார். அதேபோல் இந்தப் படத்தில் சூர்யாவின் அபாரமான நகைச்சுவைத் திறமையும் வெளிப்பட்டது.

'பேரழகன்' படத்தில் முதுகில் கூன் விழுந்தவராக நடித்திருந்தார். கதாபாத்திரத்துக்காக உடலை வருத்திக்கொள்ளத் தொடங்கினார். மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து' படத்தில் மாணவர் தலைவர் மைக்கேல் வசந்தாக சமூக அக்கறை கொண்ட படித்த இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தினார்.

பிளாக்பஸ்டர் நாயகன்

2005-ல் ஏ.ஆர்.முருகதாஸுடன் அவர் முதல் முறையாக இணைந்த 'கஜினி' படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்தை பல மடங்கு உயர்த்தியது. இந்தப் படத்தில் பெரும் பணக்காரத் தொழிலதிபராக நடித்த சூர்யா அதே ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான 'ஆறு' படத்தில் குடிசைப் பகுதியில் வளர்ந்த இளைஞராக ஆக்‌ஷன் நாயகனாகச் சிறப்பாக நடித்திருந்தார். 2007-ல் ஹரி இயக்கத்தில் வெளியான 'வேல்' படத்தில் கிராமத்து இளைஞராக நடித்திருந்தார். அந்தப் படமும் வெற்றிபெற்றது.

தோழமைமிக்க தந்தை

கெளதம் மேனன் இயக்கத்தில் தந்தை-மகனாக நடித்தார் சூர்யா . தந்தையாக நரைத்த தலை, மூக்குக் கண்ணாடி தன் வயதுக்கு மீறிய வேடத்தில் மிக கண்ணியமாகவும் சிறப்பாகவும் நடித்திருந்தார். மகன் வேடத்துக்காக கடும் உடற்பயிற்சி செய்து சிக்ஸ்-பேக் உடற்கட்டுடன் தோன்றினார். தோழமைமிக்க தந்தை-மகன் உறவின் அழுத்தமான திரை அடையாளமாக அந்தக் கதாபாத்திரங்கள் திகழ்கின்றன. திகழ்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான 'அயன்', கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'ஆதவன்' படங்கள் வெகுஜன ரசனைக்கு மிகவும் திருப்தியளித்த கமர்ஷியல் வெற்றிப் படங்கள். இந்தப் படங்கள் மூலம் சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்து மென்மேலும் உயர்ந்தது.

ஓங்கி ஒலித்த கர்ஜனை

2010-ல் ஹரியுடன் மீண்டும் இணைந்து 'சிங்கம்' படத்தில் நடித்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறை அதிகாரியாக நடித்தார். 'காக்க காக்க' படத்தில் புத்திசாலித்தனமான ஸ்டைலிஷ் போலீஸ் என்றால் இதில் அன்பும் பாசமும் வீரமும் விவேகமும் நிறைந்த ஆரவாரமான அதகளமான போலீஸாக முழுமையாக மாறியிருந்தார். படத்தில் இவர் பேசிய பன்ச் வசனங்கள் அசலான சிங்கத்தின் கர்ஜனையாக ஒலித்தன. படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

உடலை வருத்தும் நடிப்பு

2011-ல் மீண்டும் முருகதாஸுடன் கைகோத்து 'ஏழாம் அறிவு' படத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த போதி தர்மராக நடித்திருந்தார். கே.வி.ஆனந்த் இயக்கிய 'மாற்றான்' படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்திருந்தார். இப்படி வெகுஜன சட்டகத்துக்குள்ளேயே அபாரமான மெனக்கெடல் தேவைப்படும் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

பன்மடங்கான ரசிகர்படை

'சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகமான 'சிங்கம் 2' 2013-ல் வெளியாகி அதுவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 2017இல் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக 'சிங்கம்' படத்தொடரின் மூன்றாம் பாகமான 'சி3' வெளியானது.

இந்தக் காலகட்டத்தில் சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்தை பன்மடங்கு உயர்த்தியது. தமிழ் சினிமாவின் நட்சத்திர ஏணியில் உச்ச நிலையில் இருக்கும் நடிகர்களில் ஒருவரானார். ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்தது. சமூக ஊடகங்களில் அவருக்கென்று ஒரு மாபெரும் ரசிகர் படை இயங்கிவருகிறது.

இவற்றுக்கிடையில் 2014-இல் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'அஞ்சான்' மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. மும்பை நிழலுலகைச் சேர்ந்தவராக சூர்யா நடித்திருந்தார். மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் வெற்றிபெறவில்லை. ஆனால் சூர்யாவின் நடிப்பும் ஆக்‌ஷன் காட்சிகளும் ரசிகர்களைக் கவர்ந்தன. 2015-ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த 'மாசு என்கிற மாசிலாமணி' படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவின் நகைச்சுவைத் திறன் சிறப்பாக வெளிப்பட்டிருந்தது.

காலத்தால் அழிக்க முடியாத பயணம்

2016-ல் சூர்யா தயாரித்து நடித்த '24' காலத்தில் பயணித்தல் (டைம் ட்ராவல்) என்ற அறிவியல் மிகு புனைவு கருதுகோளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சோதனை முயற்சி. விக்ரம் குமார் இயக்கிய இந்தப் படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருந்தார். ஆத்ரேயா என்ற வில்லன் கதாபாத்திரமும் அவற்றில் ஒன்று. கதை, திரைக்கதையில் புதுமையும் உருவாக்கத்தில் உயர்வான தரத்தையும் எட்டிப்பிடித்த இந்தப் படம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் வியந்து பாராட்ட வைத்தது. படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெற்றிபெற்றது.

ரசிகர்களின் பெரும் மதிப்பைப் பெற்ற இயக்குநர் செல்வராகவனுடன் முதல் முறையாக சூர்யா கைகோத்த படம் 'என்.ஜி.கே' ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை. ஆனால் இந்தப் படத்திலும் ஒரு அரசியல் கட்சியில் கடைநிலைத் தொண்டனாக இணைந்து பல அவமானங்களை எதிர்கொண்டு அரசியலில் முன்னேறும் லாவகத்தைக் கற்று வெற்றிக்கோட்டை கட்டும் இளைஞனாக வெகு சிறப்பாக நடித்திருந்தார் சூர்யா.

அடுத்தகட்டத்துக்கான பாய்ச்சல்

தற்போது சுதா கொங்காரா இயக்கியுள்ள 'சூரரைப் போற்று' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் சூர்யா. 'ஏர் டெக்கான்' விமான நிறுவன அதிபர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. படத்தின் ட்ரெய்லர், இதுவரை வெளியான பாடல்கள் என அனைத்தும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளன. படம் வெளியானபின் சூர்யா தன் நெடிய திரைவாழ்வில் அடுத்த கட்ட உயரத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

சூர்யாவின் தனித்தன்மை

ஒரு நடிகராக எந்தச் சட்டகத்துக்குள்ளும் தன்னை அடைத்துக்கொள்ளாமல் திறந்த மனதுடன் கிளாஸ் படங்களிலும் மாஸ் படங்களிலும் மசாலா படங்களிலும் வெகுஜன சட்டகத்துக்குள் வித்தியாசமான படைப்புகளிலும் முற்றிலும் புதிய சோதனை முயற்சிகளிலும் நடித்துவந்துள்ளார் சூர்யா. பல வெற்றிகளையும் தோல்விகளையும் கண்டாலும் அனைத்துப் படங்களிலுமே தன் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளார். எல்லா விதமான கதாபாத்திரங்களுக்கும் கச்சிதமாகப் பொருந்துபவராக இருக்கிறார். அதற்கான மெனக்கெடலில் புதிய எல்லைகளைத் தாண்டுகிறார்.

'கலைமாமணி' விருது, மூன்று முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது, பல ஃபிலிம்ஃபேர் விருதுகள் என நடிப்புக்காக அவருக்குக் கிடைத்த அங்கீகாரங்களின் பட்டியல் மிக நீண்டது. இதுவரை தேசிய விருதைப் பெறாதது அவருடைய நடிப்பின் தகுதிக் குறைவால் அல்ல. அந்தந்த ஆண்டுகளில் வேறு படங்களுக்கும் அவற்றில் நடித்தவர்களுக்கும் அமைந்த கூடுதல் முக்கியத்துவமே காரணம். இருந்தாலும் இதைத் தாண்டி மிக விரைவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நடிப்புக்கு அப்பால்

சூர்யா நடித்துள்ள திரைப்படங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதன் மூலமாகவே அவர் எப்படிப்பட்ட நடிகர் என்பதையும் அவருடைய வெற்றி எத்தகையது என்பதையும் அவர் ரசிகர்கள், விமர்சகர்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருப்பதற்கான காரணத்தையும் விளங்கிக்கொள்ளலாம். இதைத் தவிர தரமான படங்களின் தயாரிப்பாளராகவும் அகரம் அறக்கட்டளை மூலம் ஏழைக் குழந்தைகளின் கல்விக்குப் பெரும் தொண்டாற்றியவராகவும் சமூக அவலங்களை எதிர்த்து துணிச்சலாகக் கேள்வி எழுப்புபாராகவும் திரைக்கு வெளியேயும் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஆளுமையாகத் திகழ்கிறார்.

திரை நட்சத்திர வானில் பட்டொளி வீசிப் பறக்கும் சூரியனாகத் திகழும் சூர்யா இன்னும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் குவிக்க இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in