Last Updated : 23 Jul, 2020 04:55 PM

 

Published : 23 Jul 2020 04:55 PM
Last Updated : 23 Jul 2020 04:55 PM

சின்னத்திரையிலிருந்து ஒரு கதாநாயகி!

திவ்யா துரைசாமி.

செய்தி வாசிப்பாளார், தொகுப்பாளினி என எல்லோருக்கும் தெரிந்த முகமாக இருக்கும் திவ்யா துரைசாமி, சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைக்க உள்ளார். கரோனா ஊரடங்கு வீட்டிலேயே முடக்கிப் போட, தினந்தோறும் விதவிதமான போட்டோக்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வருவதையும் ஒரு கடமையாகவே செய்துவருகிறார். இனி ஓவர் டூ திவ்யா துரைசாமி.

ஃபேஸ்புக்கில் உங்கள் பக்கம் முழுவதும் போட்டோவா தெறிக்குதே...?

கரோனா ஊரடங்குக்கு முன்பே சினிமாவில் கமிட் ஆகிவிட்டேன். ஷூட்டிங் ஆரம்பிக்குற நேரத்துல, கரோனா வந்து லாக்டவுன் போட்டுட்டாங்க. லாக் டவுன் எவ்வளவு நாள் போகும்னு தெரியாது. சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கினா, குண்டாகும் வாய்ப்பு இருக்குல்லையா..? அதுக்காக என்னைப் புத்துணர்ச்சியா வைச்சுக்க போட்டோ எடுத்துப் போட ஆரம்பிச்சேன். என் வீட்டுப் பக்கத்துலேயே போட்டோகிராபரான என் நண்பர் ஜவஹர் இருந்ததால, போட்டோ எடுப்பது ரொம்ப சுலபமாப் போச்சு.

சினிமாவில் கதாநாயகியா கமிட் ஆகியிருக்கீங்களா..?

‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்துல ஹீரோயின் ஃபிரண்ட் கதாபாத்திரத்துல நடிச்சேன். அதுக்கு அடுத்து, இயக்குநர் பாலாஜி சக்திவேல் படத்துல ஒரு கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகல. தற்போது ரெண்டு படத்துல நான் ஹீரோயினா கமிட் ஆகியிருக்கேன். அதைப் பத்தி டைரக்டரும் தயாரிப்பாளரும்தான் சொல்லணும். பெரிய டைரக்டர், பெரிய படம். அதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால சொல்ல முடியும். ஓரிரு மாதங்களில் இந்தப் படத்தோட ஷூட்டிங் ஆரம்பம்பமாகும்னு நினைக்கிறேன்.

அப்போ இனி முழுக்க முழுக்க சினிமாதானா?

சினிமாதான் இனி என்னுடைய டிராவலா இருக்கும். இனி, தொடர்ந்து கதாநாயகியா நடிக்கணும் என்பதுதான் என்னுடைய விருப்பம். இதுக்காகத்தான் நான் ரொம்ப நாளா காத்திருந்தேன். நல்ல நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கு. தனித்துவமான பெர்ஃபார்மர் என்று பெயரெடுக்கணும். மலையாளத்தில் பார்வதி மாதிரி தனித்துவமான நடிகையா இருக்கணும்.

ஃபேஸ்புக்கில் ‘தமிழ்ப் பொண்ணு’ என்ற கேப்ஷன் வைச்சதுக்கு காரணம் ஏதும் இருக்கா?

தாய்மொழி தமிழ் என்பதால், அதை உணர்த்துறதுக்காக ‘தமிழ்ப் பொண்ணு’ என்று வைச்சேன். பெரும்பாலும் தமிழிலிருந்து யாரும் சினிமாவுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் எல்லோரும் ஜொலிக்கிறது இல்ல. மற்றவர்களைவிடத் தமிழ் மொழி தெரிந்து நாம் நடிப்பது ஒரு பிளஸ்தான். காட்சிகளைத் தாய்மொழியில் புரிந்துகொண்டு அதை வெளிப்படுத்துவதும் ரொம்ப சுலபம். அதையெல்லாம் மனசுல நினைச்சு, வைச்ச கேப்ஷன் அது.

உங்கள் வரவை சினிமாவில் ரசிகர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

என்னை செய்தி வாசிப்பவராகப் பார்த்திருப்பாங்க. தொகுப்பாளினியாவும் பார்த்திருப்பாங்க. சினிமாவில் பார்க்கும்போது தமிழ்ப் பொண்ணு, பக்கத்துவீட்டுப் பொண்ணு, நம்ம வீட்டுப் பொண்ணு என்ற நினைப்பில் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கு. அப்படி நினைக்கும் வகையில்தான் நான் நடிக்கவும் விரும்புகிறேன். எந்த மாதிரியான ரோலாக இருந்தாலும் நல்லபடியா பண்ணணும்னு நினைக்கிறேன்.

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வருவது பிளஸ் என்று நினைக்கிறீர்களா?

தொலைக்காட்சியிலிருந்து பெரிய திரைக்கு வருவது என்பது அட்வான்டேஜ் என்று சொல்ல முடியாது. டி.வி.யில் நாம் தெரிந்த முகம் என்பதையெல்லாம் பார்த்து யாரும் வாய்ப்பு கொடுக்க மாட்டாங்க. ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானிசங்கர் போன்றோர் எல்லாம் டி.வி.யில் இருந்ததால்தான் சினிமாவில் வாய்ப்புக் கிடைத்தது என்றெல்லாம் சொல்ல முடியாது. நம் முயற்சிகளைப் பொறுத்துதான் வாய்ப்பெல்லாம் கிடைக்கும். டி.வி.யில் இருக்கீங்களே, வாங்க ஒரு படத்தில் நடிச்சுக் கொடுங்க என்று யாரும் வாய்ப்பு கொடுத்துவிட மாட்டார்கள். நான் ஓராண்டுக்கு மேலாக வாய்ப்பு தேடியிருக்கிறேன். சொல்லப்போனால் டி.வி.யிலிருந்து வருவது என்பது நிறைய இடங்களில் டிஸ்அட்வான்டேஜ்தான்.

சினிமாவுக்கு வந்துவிட்ட பிறகு, இனி அரசு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகப் பார்க்க முடியுமா?

முதல்வர் நிகழ்ச்சியோ, அரசு நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் தொகுப்பாளினி என்று என் பெயரைப் போட்டுவிடுவார்கள். எனக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரும்போது அதைச் செய்ய முடியாது என்று சொல்ல முடியாது அல்லவா? இனி கரோனாவுக்குப் பிறகு என்னால் முடிந்தால் அரசு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி வேலையைச் செய்வேன். ஆனால், அதெல்லாம் என் ஷூட்டிங் வேலையைத் தாண்டிதான் செய்ய முடியும்.

ஆளுங்கட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியா இருப்பதால், கட்சி முத்திரை உங்க மேலே விழுந்திருக்கா?

அரசியல் சார்பு என் மேல விழுந்திருக்கு. ஆனால், உண்மையில் அது என்னுடைய வேலை. ஆளுங்கட்சி நிகழ்ச்சிகளில் இருந்ததைப் பார்த்துவிட்டு திமுகவிலும் என்னை அழைத்திருக்கிறார்கள். கலைஞர் அஞ்சலி நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கியிருக்கேன். அதிமுக நிகழ்ச்சியில் பார்த்துவிட்டுதான் என்னைக் கூப்பிட்டாங்க. பப்ளிக் மத்தியில்தான் பார்வை மாறும். அரசியல் தலைவர்களிடம் அதுபோன்ற எண்ணம் இல்லை. ‘நீங்க எங்க தொகுப்பாளினியா இருந்தாலும் அது உன்னோட வேலைம்மா. எங்க நிகழ்ச்சிக்கும் வாங்க” என்று துரைமுருகன் ஐயா அழைத்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடமும் என்னை அறிமுகம் செய்துவைத்தார்.

படங்கள்: ஜவஹர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x