

கடந்த 2 நாட்களாக மீண்டும் சிம்புவின் திருமண வதந்தி உலவி வருகிறது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரைப் பற்றி காதல், திருமணம் என பல்வேறு வதந்திகள், செய்திகள் என வெளியாகியுள்ளன. லண்டன் தொழிலதிபர் மகள் ஒருவரை காதலித்து வருவதாக ஜூன் 7-ம் தேதி செய்தி வெளியானது. இதற்கு சிம்பு குடும்பத்தினர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே திடீரென்று சிம்பு - த்ரிஷா இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கடந்த 2 நாட்களாக செய்தி உலவி வருகிறது. இருவரும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்குப் பிறகு இணைந்து நடிக்கவில்லை. சிம்பு - த்ரிஷா இருவருமே முன்னணி பிரபலங்கள் என்பதால், இந்த திருமண செய்தி வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக விசாரித்த போது, "சிம்பு - த்ரிஷா இருவருமே நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பு இப்போது வரை நட்பாக மட்டுமே இருக்கிறது. இருவரும் திருமணம் செய்ய வாய்ப்பே இல்லை. எப்படி இந்த வதந்தி உருவானது என்றே தெரியவில்லை" என்று குறிப்பிட்டார்கள்.