Last Updated : 22 Jul, 2020 11:58 AM

Published : 22 Jul 2020 11:58 AM
Last Updated : 22 Jul 2020 11:58 AM

முக்கோணக் காதல் கதைகளின் மன்னன்

தமிழ்த் திரைப்படங்களின் பாதையில் திருப்பு முனையை ஏற்படுத்திய இயக்குநர்களில் ஒருவர் C.V. ஸ்ரீதர். பதினேழு பதினெட்டு வயதில், பலருக்கும் திரைப்படத்தை எப்படிப் பார்ப்பது என்ற பயிற்சியே ஏற்பட்டிருக்காது. அந்தப் பருவத்தில், ஒரு திரைப்படத்துக்கான கதையையே எழுதி முடித்தவர் ஸ்ரீதர். லட்சியவாதி என்னும் பெயரில் கதை ஒன்றை எழுதிய ஸ்ரீதர் அதை எடுத்துக்கொண்டு ஏவிஎம் ஸ்டுடியோ சென்றிருக்கிறார். அப்போதைய திரைப்பட இயக்குநர் ப. நீலகண்டன் அந்தக் கதையை நிராகரித்துவிட்டார். என்றாலும், நாடகக் கலைஞர் டி.கே.சண்முகம் அதை மேடை நாடகமாக்கினார். பின்னரே, அது ‘ரத்தபாசம்’ (1954) என்னும் பெயரில் திரைப்படமானது. இப்படித்தான் ஸ்ரீதருக்கு முதல் திரை வாய்ப்புக் கிடைத்தது. நாடகம் வழியே சினிமாவுக்கு வந்தபோதும் சினிமா என்னும் ஊடகத்தின் மொழி, காட்சியே என்பதில் அவருக்குத் தெளிவு இருந்தது. அதுமட்டுமல்ல; நாடகத்தனமான வசனங்களைப் பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவைச் சாதாரண மனிதர்கள் பேசிக்கொள்ளும் இயல்பான வசன நடைக்கு நகர்த்தினார் அவர்.

தன் குருவான இயக்குநர் ஸ்ரீதர் பற்றிப் பிரபல இயக்குநர் P.வாசு, “எங்க டைரக்டர் ஸ்ரீதர் பற்றிச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முதல் டிரெண்ட் செட்டர். ஸ்டேட்டிக்காக இருந்த சினிமாவை மூவியாக மாற்றிய அவர் பல சாதனைகளைச் செய்திருக்கிறார். முதன்முதலில் புதுமுகங்களை வைத்து முழுப் படம் எடுத்தவர் அவர்தான். முதன்முதலில் காஷ்மீருக்கு வெளிப்புறப் படப்பிடிப்புக்குச் (‘தேன்நிலவு’) சென்றவர் அவர்தான். முதலில் வெளிநாட்டுக்குச் சென்று படமெடுத்ததும் அவர்தான் (‘சிவந்த மண்’). ஒப்பனையே இல்லாமல் அனைவரையும் அப்படியே நடிக்கவைத்தவர் அவர்தான் (’நெஞ்சிருக்கும் வரை’). அவருக்கு நிகராக என்னால் யாரையும் சொல்லிட முடியாது. ஏனெனில், தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்திராத காலத்திலேயே பல வித்தைகளைக் காட்டியிருக்கிறார். 28 நாட்களில் படமெடுத்திருக்கிறார். ஒரே செட்டில் படமெடுத்திருக்கிறார் (’நெஞ்சில் ஓர் ஆலயம்’). இயக்கம் குறித்து அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொரு இளைஞரும் ஸ்ரீதரின் படங்களைப் பார்த்தால் போதும், இயக்கம் என்றால் என்பது பற்றித் தெரிந்துகொள்வார்கள்” என்றெல்லாம் பெருமையாகச் சொல்கிறார். ’மீனவ நண்பன்’ தொடங்கி (பட டைட்டிலில் P. வாசுதேவன்) பல படங்களில் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக P. வாசு பணியாற்றியுள்ளார்.

பி.வாசு எதையும் மிகைபடக் கூறவில்லை. ஏனெனில், ஸ்ரீதரின் தனித்துவம் அதுதான். அவர் எதையும் புதுமையாகக் கையாள ஆசைப்பட்டிருக்கிறார். திரைத்துறைக்குப் பலரை அறிமுகப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக உருவாக்க வேண்டும் என்ற முனைப்பு கொண்டுள்ளார். அவர் இயக்கிய முதல் படமான ’கல்யாண பரிசு’ (1959) தொடங்கி இறுதியாக இயக்கிய ’தந்துவிட்டேன் என்னை’ வரை அவர் பரிசோதனை முயற்சிகளை நிறுத்தவேயில்லை. முக்கோணக் காதல் கதையான, வெள்ளிவிழா கண்ட ’கல்யாண பரிசு’ படத்தில் நாயகியான வசந்தி, சைக்கிளில் சென்று கல்லூரியில் படித்துவருவாள். நாயகியை அழகுப் பதுமையாக மட்டும் பயன்படுத்தாத போக்கை முதல் படத்திலேயே வெளிப்படுத்தியவர் ஸ்ரீதர். எழுத்தாளர் பைரவனாக வேடமேற்ற தங்கவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றுவரை மக்கள் மனத்தில் நிலைத்துள்ளன. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘உன்னைக்கண்டு நானாட’ பாடல் தமிழ்நாட்டின் முக்கியமான தீபாவளிப் பாடலாக இன்றுவரை உள்ளது. ‘காதலிலே தோல்வியுற்றான்’ பாடல் தமிழ் தேவதாஸ்களின் ஒருமித்த குரலாகவே வெளிப்பட்டது. இவ்வளவுக்கும் அதுவரை வெறுமனே பாடகராக மட்டுமே இருந்த வந்த ஏ.எம்.ராஜா முதன்முதலில் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

’கல்யாண பரிசு’ படத்தைத் தனது பத்து வயதில் பார்த்ததாக நினைவுகூரும் நடிகர் ராஜேஷ், ”நான் அவரது இயக்கத்தில் ’ஆலய தீபம்’, யாரோ எழுதிய கவிதை’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் அவரிடம் விவாதிக்கலாம். தான் ஒரு பெரிய இயக்குநர் என்பதுபோல் நடந்துகொள்ள மாட்டார். அவரது கடைசிக் காலம் வரை அவருடன் பழகியிருக்கிறேன். மிக நல்ல மனிதர். அவரது புகழ் தமிழ்த் திரையுலகம் இருக்கும் வரையிலும் இருக்கும்” என்று ஸ்ரீதர் குறித்துப் பெருமிதத்துடன் பேசுகிறார்.

ஸ்ரீதர் உருவாக்கிய ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ (1962) படத்தில் பிரபல ஹாலிவுட் படமான ’காசாப்ளாங்கா’வின் சாயல் தென்படும். ஆனாலும், ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ முழுமையான தமிழ்ப் படம். இதுவும் ஒரு முக்கோணக் காதல் கதையே. கணவன் உயிருக்குப் போராடுகிறான். அவனுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர் அவளுடைய முன்னாள் காதலன். ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவர் மேற்கொள்கிறார். அதுதான் படத்தின் உச்சகட்டக் காட்சி. யாருமே எதிர்பார்த்திராத முடிவைக் கொடுத்து ஸ்ரீதர் தான் யார் என்பதை நிரூபித்திருப்பார். ஏ.எல்.ராகவன் குரலில் ஒலிக்கும் இப்படத்தின் ’எங்கிருந்தாலும் வாழ்க’ பாடல் சாகாவரம் பெற்றது.

முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவை நாயகியாக அறிமுகப்படுத்திய ’வெண்ணிற ஆடை’ (1965) படமும் ஒரு முக்கோணக் காதல் கதைதான். மனோதத்துவ நிபுணரான சந்த்ரு, கீதாவைக் காதலிக்கிறார். கீதாவும் சந்த்ருவும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் உள்ளனர். அப்போது, கொடைக்கானலில் வாழும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள பணக்காரப் பெண்ணான ஷோபாவைக் குணப்படுத்தும் பணிக்காக சந்த்ரு அங்கே செல்கிறான். குணமடைந்த ஷோபா சந்த்ருவைக் காதலிக்கிறாள். இப்போது சந்த்ரு அந்தக் காதலை மறுத்தால் அவளது மனநிலை மீண்டும் பாதிக்கப்பட்டுவிடும், ஆனால் காதலை ஏற்றுக்கொண்டாலோ அவருடைய காதலி கீதாவுக்குப் பித்துப் பிடித்துவிடும். இதற்கான முடிவை ஸ்ரீதர் தன் பாணியில் தந்திருப்பார், அதுதான் 'வெண்ணிற ஆடை'. 1962-ல் வெளியான டேவிட் அண்ட் லிசா எனும் அமெரிக்கப் படத்தின் தாக்கத்தில் இந்தப் படத்தை ஸ்ரீதர் உருவாக்கியுள்ளார்.

இதற்கு அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் காலத்தில் ஸ்ரீதர் உருவாக்கிய ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ (1978) படமும்கூட முக்கோணக் காதல் கதைதான். பத்மாவும் பிரபுவும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள். பத்மாவின் தோழி கைம்பெண்ணான ஜெயந்தி. பிரபுவின் நண்பன் முரளி. முரளியின் அலுவலகத்தில் பத்மா பணிசெய்கிறாள். கைம்பெண்ணான ஜெயந்திக்கும் இளம்வயதுதான். இவர்களது இளமை ஊஞ்சலாடியதால் ஏற்படும் உணர்ச்சிக் குழப்பங்களும் உறவுச் சிக்கல்களுமே அந்தப் படம். இதற்கு அடுத்த ஆண்டே ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ என ஒரு படமெடுத்தார் ஸ்ரீதர். இதில் முக்கோணக் காதல் கதைக்கு உலகப் புகழ்பெற்ற ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளின் தாக்கம் காணப்படும். இறுதியாக அவர் விக்ரம், ரோகிணி ஆகியோரை வைத்து உருவாக்கிய ’தந்துவிட்டேன் என்னை’யும் ஒரு முக்கோணக் காதல் கதைதான்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல், மோகன் என இரண்டு தலைமுறையில் ஆதிக்கம் செலுத்திய நாயகர்களை வைத்தும் படம் எடுத்திருக்கிறார். அவற்றில் பல வெற்றிகளைக் குவித்துள்ளார் என்பதிலிருந்தே பொழுதுபோக்கு அம்சத்தில் அவர் எந்த அளவுக்குக் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார் என்பது புலப்படும். பாடல்களுக்காகவே ஒரு வருடம் ஓடிய ‘தென்றலே என்னைத் தொடு’ படத்தின் அடிப்படைக் கதையை ஒரு வரிக்குள் அடக்கிவிடலாம். ஒரு படம் போல் மற்றொரு படம் அமைந்துவிடக் கூடாது என்று அவர் விரும்பினாலும் அவரது பெரும்பாலான படங்கள் வேலை, காதல், கல்யாணம் என்ற மூன்று தளத்திலேயே பரவிப் படர்ந்துள்ளன.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய சாதனையாளர்களில் பலரைத் தமிழ் சினிமா உலகம் சரியாகக் கௌரவிக்கவில்லை. அதில் குறிப்பிடத் தகுந்த இயக்குநர் ஸ்ரீதர். நவீன சினிமாவை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு ஸ்ரீதருக்கு உண்டு. அப்படியான மாபெரும் திறமைசாலியை நாம் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று வருத்தப்படுகிறார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன். அது உண்மையா என்பதைக் காலம்தான் கூற வேண்டும்.

1959-ல் அவர் உருவாக்கிய ‘கல்யாண பரிசு’ படத்தில் இறுதிக் காட்சி காதலன் ஒருவன் காதலியின் திருமணத்தைப் பார்ப்பது. 1991-ல் அவர் படமாக்கிய ‘தந்துவிட்டேன் என்னை’யிலும் இறுதிக் காட்சி காதலன் ஒருவன் தன் காதலியின் திருமணத்தைப் பார்ப்பதுதான். முதல் படத்தில் அட்சதையைப் பெறுபவர் ஜெமினி எனில் இறுதிப் படத்தில் அட்சதை பெறும் நாயகன் விக்ரம். இரண்டுக்குமிடையே முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஓடியிருக்கின்றன. ஒரு முழு சுற்று ஓடி முடித்துவிட்டார் ஸ்ரீதர். இன்று அவரது பிறந்த நாள். அவரது படங்களைப் பார்ப்பதன் வழியே அவரை நாம் நினைவுகூரலாம்.

தவறவிடாதீர்!Sign up to receive our newsletter in your inbox every day!

 
x