கனடாவில் சிக்கிய விஜய் மகன்; 14 நாட்கள் தனிமைக்குப் பிறகு வீடு திரும்பினார்

கனடாவில் சிக்கிய விஜய் மகன்; 14 நாட்கள் தனிமைக்குப் பிறகு வீடு திரும்பினார்
Updated on
1 min read

கனடாவிலிருந்து சென்னை திரும்பிய விஜய் மகன் சஞ்சய், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, 2 நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். இத்தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தீவிரமாக இருந்தது. இதனால் அனைத்துத் திரையுலகப் பிரபலங்களுமே வீட்டிலேயே பொழுதைக் கழித்து வந்தனர். வெளிநாட்டில் படித்து வந்த பிரபலங்களின் வாரிசுகள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள்.

அந்தச் சமயத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவிலிருந்து சென்னைக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கனடாவிலேயே நண்பர்களுடன் தங்கியிருந்தார். இதனால் விஜய் வேதனையில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதை விஜய் தரப்பும் மறுத்தது. தினமும் விஜய் அவருடைய மகன் சஞ்சயிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியானது.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு கனடாவிலிருந்து சென்னை திரும்பினார் விஜய் மகன் சஞ்சய். அப்போது வெளிநாட்டிலிருந்து சென்னை வருபவர்களுக்கு என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ, அதையே பின்பற்றி இருக்கிறார். அதாவது ஹோட்டலில் 14 நாட்கள் தனிமையில் தங்கியிருந்துவிட்டு, 2 நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். இத்தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

சஞ்சய் பத்திரமாக வீடு திரும்பியிருப்பதால், விஜய்யின் குடும்பத்தினர் நிம்மதியுடன் இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in