

'ஓ மை கடவுளே' பார்த்துவிட்டு, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இந்தாண்டு காதலர் தினத்தன்று இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படக்குழுவினரை பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் தொலைபேசி வாயிலாகப் பாராட்டினார்கள். இதர மொழிகளிலும் ரீமேக்காகவுள்ளது.
இந்த கரோனா ஊரடங்கில் 'ஓ மை கடவுளே' பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார் மகேஷ் பாபு. இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் "'ஓ மை கடவுளே' பார்த்தேன். ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். அற்புதமான நடிப்பு, புத்திசாலித்தனமாக எழுதி இயக்கப்பட்டுள்ளது. அசோக் செல்வன் நீங்கள் ஒரு இயல்பான நடிகர்" என்று தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.
மகேஷ் பாவுவின் இந்த ட்வீட்டால் 'ஓ மை கடவுளே' படக்குழுவினர் பெரும் உற்சாகமாகியுள்ளனர். இது தொடர்பாக படக்குழுவினர் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து: சார்ர்ர்ர்!!! கடவுளே! இந்த நாள் இனிய நாள்.. உங்கள் ரசிகனான எனக்கு உங்களிடமிருந்து இது போன்ற வார்த்தைகள் கிடைப்பது.... சொல்ல வார்த்தைகள் இல்லை.
அசோக் செல்வன்: நிச்சயமாக இதுதான் என்னுடைய 'ஓ மை கடவுளே' தருணம். மிக்க நன்றி சார். நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன். நான் இங்கே நடனமாடிக் கொண்டிருக்கிறேன்.
ரித்திகா சிங்: கடவுளே. இது உண்மையா? மிக்க நன்றி சார். உங்களிடமிருந்து பாராட்டு கிடைப்பது மிகப்பெரிய விஷயம். என்னவொரு நாள்!!!