ஓடிடி தளத்தில் வெளியாகும் கண்ணாடி

ஓடிடி தளத்தில் வெளியாகும் கண்ணாடி
Updated on
1 min read

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'கண்ணாடி' ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜூ. தனது மூன்றாவது படமாக சந்தீப் கிஷன், ஆன்யா சிங் உள்ளிட்டோர் நடிக்கும் ‘கண்ணாடி’ படத்தை இயக்கினார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே நாயகன், நாயகி தவிர மற்ற அனைத்து நடிகர்களுமே மாறியிருந்தார்கள். தமிழில் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெலுங்கில் வெண்ணிலா கிஷோர், பூசாணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தமிழ் - தெலுங்கு என ஒரே நேரத்தில் திட்டமிடப்பட்ட, இந்தப் படம் தமிழில் பைனான்ஸ் சிக்கலால் வெளியாகவில்லை. தெலுங்கில் ‘Ninu Veedani Needanu Nene’ என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகும் கூட பல முறை 'கண்ணாடி' வெளியீடு திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்தப் படம் முதலிலேயே அமேசான் தளத்துக்கு டிஜிட்டல் வெளியீடு உரிமை விற்கப்பட்டு இருந்தது. ஆனால், படம் வெளியாகாததால் டிஜிட்டலிலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது நேரடியாக இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு விட்டது. இந்த மாதம் இறுதியில் அமேசானில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கண்ணாடி' படத்துக்குப் பிறகு 'சூர்ப்பனகை' என்னும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் ராஜூ. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in